தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பம்: ரஜினி – கமல் இணைந்து செயல்பட ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக அரசியலில் திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான புதிய அரசியல் இயக்கம் வரவேண்டும் என்று பலரும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டால், தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று திரையுலகை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் கருதுகின்றனர்.

இதற்கு முன்னோட்டமாக கமலஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 17 ம் தேதி நடக்கும் விழாவில் ரஜினியை அழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரஜினியும் அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில், திமுக அதிமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான், கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தேர்தலில் பங்கேற்றார்.

அந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்ற போதிலும், பல இடங்களில் அவரது கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

இது ஒரு புறம் இருக்க, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி இரண்டு வருடங்கள் ஆகியும், இன்னும் அது குறித்து நேரடியான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

அதற்குள் அவர் பாஜகவில் சேருவார், தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்றெல்லாம் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

ஆனால், இதற்கெல்லாம் ரஜினி தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. வழக்கம் போல அவர் அமைதியாகவே இருக்கிறார்.

தமிழகத்தில் இரண்டு சதவிகிதம் கூட வாக்குகள் இல்லாத பாஜகவில் சேருவதையோ, ஒரு வேளை கட்சி ஆரம்பித்தால், பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவோ ரஜினி விரும்பவில்லை என்றே ரஜினி ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரஜினி – கமல் இணைந்து தேர்தலை சந்தித்தாலும், அல்லது ரஜினி கட்சியுடன் கமல் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.

அதற்கான தொடக்கமாகவே கமலின் பிறந்தநாள் விழாவிற்கு ரஜினியை அழைக்கும் திட்டம். இதை ரஜினியும் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

ஆனால், ரஜினி கமல் இணைந்து செயல்படவேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள் பலருக்கு மேலிடத்தின் நெருக்கடி கடுமையாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில், கடந்த தேர்தலில் கமல் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்கள் நேற்று பாஜகவில் இணைந்துள்ளனர். இதுவும், ரஜினி –கமல் இணைவுக்கு எதிரான நடவடிக்கையே என்றும் சிலர் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், அதிமுக – திமுகவுக்கு மாற்றாக ஒரு வலுவான அரசியல் இயக்கம் வேண்டும் என்பதில், ரஜினி, கமல் ஆகிய இருவருமே தெளிவாக உள்ளனர்.

அதற்காக அவர்கள் இருவரும் இணைந்து ஒரு முயற்சியை தொடங்கினால், திரையுலகில் உள்ள மற்ற சிலரும், பல்வேறு அரசியல் காட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகள் பலரும் அவர்களோடு பங்கேற்க தயாராக இருக்கின்றனர்.

இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு ரஜினி கையில்தான் இருக்கிறது!