உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் மூச்சு திணறும் அதிமுக – திமுக! 

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எந்த நேரமும் வரலாம் என்று காத்திருக்கும் நிலையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் அதிமுக மற்றும் திமுக மூச்சு திணறி வருகின்றன.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறப்போகும் உள்ளாட்சி தேர்தல், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோடியாக இருக்கும் என்பதால், திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள்,   99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கட்சி சார்பற்று தேர்தல் நடைபெற உள்ளது.

இது தவிர, 15 மாநகராட்சிகள்,  121 நகராட்சிகள்,  528 பேரூராட்சிகள்,  385 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள்,   6 ஆயிரத்து 471 ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகள்,   31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள்,    655 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன.

உள்ளாட்சி பதவிகளில் மட்டுமே ஒவ்வொரு கட்சியும் தங்கள் தொண்டர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணி தலைமைக்கு அதிக இடங்கள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

குறிப்பாக, சில மாநகராட்சிகள் மற்றும் முக்கிய நகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பட்டியலை, கூட்டணி தலைமைக்கு கொடுத்து வருகின்றன.

மறுபக்கம் அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு சாதகமான இடங்களையும், வேட்பாளர்களையும் கண்டறியும் வகையில் ஆலோசனை கூட்டங்களையும் நடத்த உள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய நான்கு மாநகராட்சி பட்டியலை கொடுத்து, அதில் இரண்டு மாநகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு அதிமுகவை கேட்டுள்ளது.

சேலம், வேலூர், ஆவடி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாநகராட்சி பட்டியலை கொடுத்து, அதில் இரண்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை மற்றொரு கூட்டணி கட்சியான பாமக வலியுறுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், திண்டுக்கல் ஆகிய நான்கில் இரண்டு மாநகராட்சியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியை மதிமுகவும், கோவையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திருப்பூரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களுக்கென்று ஒரு மாநகராட்சியை ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இது தவிர, இரண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளும், அதிக நகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. பேரூராட்சி உள்ளிட்ட இதர பதவிகளுக்கும் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில், நாளை சென்னையில் நடைபெறும் அதிமுக ஆலோசனை கூட்டத்திலும், வரும் 10 ம் தேதி நடைபெறும் திமுக ஆலோசனை கூட்டத்திலும், உள்ளாட்சி தேர்தல் பங்கீடு குறித்தே அதிகம் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சட்டமன்ற தேர்தல், வரும் 2021  ம் ஆண்டு தொடக்கத்திலேயே வர இருப்பதால், கூட்டணி கட்சிகளிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் திமுகவும் அதிமுகவும் உள்ளன.

இதனால், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு செய்வதில் திமுக அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளுமே மூச்சு திணறி வருகின்றன.