உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை குறி வைக்கும் பாஜக – பாமக: அதிமுகவின் நிலை என்ன?

உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சென்னை மாநகராட்சியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்துவதாக கூறப்படுகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க அதிமுக பொறுப்பாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில்  நாளை நடைபெறுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தாலும், அதை ஒட்டி நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

மேலும், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், அமோக வெற்றி பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தோல்வியை சந்தித்து வந்த, எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற உள்ளன.

இந்நிலையில், பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இரண்டு மாநகராட்சிகள், மற்றும் சில நகராட்சிகளை குறி வைத்து, அதிமுகவிடம் பேசி வருகின்றன.

குறிப்பாக, சென்னை மாநகராட்சியை பாஜக, பாமக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் பாஜகவுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றில் பிரதிநிதித்துவம் இல்லாததால், சென்னை மாநகராட்சி ஒதுக்கப்பட்டால், அது மிகவும் கௌரவமாக இருக்கும் என்று கருதுகிறது.

அதே சமயம், வன்னியர்கள் அதிகம் வசிப்பதால், பாமகவும் சென்னை மாநகராட்சியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி என்பது திமுகவின் கோட்டை என்பதை தகர்த்து, கடந்த தேர்தலில் வெற்றி வாகை சூடியதால், அதிமுக எக்காரணம் கொண்டும் சென்னை மாநகராட்சியை விட்டுக் கொடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தமது மகன் டாக்டர் ஜெயவர்தனை, சென்னை மாநகர அதிமுக மேயர் வேட்பாளராக நிறுத்த கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள பதினைந்து மாநகராட்சிகளில், சென்னை மாநகராட்சி என்பது அதிமுகவுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாகும். எனவே சென்னை மாநகராட்சியை விட்டு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல.

இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்க, அதிமுக ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.

முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.