பாமகவை வலுப்படுத்தும் திட்டம் தீவிரம்: தீரன் உள்ளிட்ட மூன்று பேர் அரசியல் ஆலோசகர்களாக நியமனம்!

மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணிக்கு, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் மிகப்பெரிய உற்ச்சாகத்தை தந்துள்ளது.

குறிப்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவை விட  பாமகவுக்கே அதிக பலம் சேர்த்துள்ளது.

இந்நிலையில், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள பலருக்கும் வாய்ப்பு வழங்க, வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

இதை கருத்தில் கொண்டு, பாமகவை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைமை தீவிரமாக இறங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, காடுவெட்டி குருவின் மறைவுக்கு பின்னர், முடங்கி இருந்த வன்னியர் சங்கத்தை மீண்டும் விறுவிறுப்பாக இயக்கம் வகையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பு.தா.அருள்மொழி, மாநில வன்னியர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பாமகவில் அரசியல் ஆலோசனைக்குழு என ஒரு புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் தீரன் இக்குழுவின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அன்புமணியின் முப்படைகள் என்ற அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பினர் ஒவ்வொரு வீடாக சென்று பாமகவின் கொள்கைகளை விளக்கி அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசியலில் மற்றும் பொது வாழ்வில் அனுபவம் நிறைந்த பேராசிரியர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது பாமகவுக்கு இன்னும் பலம் சேர்க்கும் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.