செம்மலை உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சர் பதவி? முதல்வர் ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன?

முதல்வர் எடப்பாடி கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று மாலை சந்தித்து பேசினார். அவருடன் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும் சென்றனர்.

இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் செம்மலை உள்ளிட்ட நான்கு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி முதல்வராக பதவி ஏற்ற பின்னர், அமைச்சரவையில் புதிதாக மாற்றம் எதுவும் செய்யவில்லை. கேபிள் டிவி இணைப்பு சம்பந்தமாக சில கருத்துக்களை கூறிய மணிகண்டன் மட்டுமே, சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரவிருப்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வரிடம் ஆளுநர் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மருத்துவர்கள் போராட்டம், திருவள்ளுவர் சிலை அவமதிப்பு போன்ற பிரச்சினைகள் எவ்வாறு சமாளிக்கப்பட்டது? என்பது குறித்தும் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி விளக்கியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பின்னர், எடப்பாடியின் செல்வாக்கு கட்சியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாம் விரும்பியபடி  அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய முதல்வர் விரும்புவதாக கூறப்படுகிறது.

அதன்படி, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை, கொங்கு பகுதியில் இருந்து தோப்பு வெங்கடாசலம், தென்மண்டலத்தில் இருந்து ராஜன் செல்லப்பா, சதர்ன் பிரபாகர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்று முதல்வர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர, பல்வேறு பொறுப்புக்களை வைத்திருக்கும் அமைச்சர்களிடம் இருந்து சிலவற்றை புதியவர்களுக்கு மாற்றி முதல்வர் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல, செயல்பாடுகளில் திருப்தி இல்லாத அமைச்சர்களை நீக்குவது அல்லது, அவர்களின் துறைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது என்றும் முதல்வர் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றத்தையும், துறைகள் மாற்றத்தையும் உடனடியாக செய்வதா? அல்லது பின்னர் செய்வதா? என்ற குழப்பமும் முதல்வருக்கு உள்ளது.

எனினும், புதிய அமைச்சர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.