ரஜினிக்கு 40 – கமலுக்கு 60:  விருதுக்கு உள்நோக்கம் உள்ளதா?

 திரையுலகில் சாதனை புரிந்த நடிகர் ரஜினிக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூபிலி” என்ற விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது கோவாவில் வரும் 20 ம் தேதி முதல்  28 ம் தேதி வரை நடைபெறும் திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது.

ரஜினி திரை உலகிற்கு வந்து நாற்பது வருடங்கள் ஆகியும், இன்று வரை இளம் நடிகர்களை விஞ்சும் வகையில் அவருடைய படங்கள் வசூல் உள்ளிட்டவற்றில் சாதனை படைத்து வருகிறது.

இந்த சாதனையின் அடிப்படையில் ரஜினிக்கு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், தமது ஆறு வயது முதல் இன்று வரை திரை உலகில் தொடர்ந்து பிரகாசித்து வரும் நடிகர் கமலஹாசன், கலைத்துறையில் அறுபது ஆண்டு கால சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

அவருக்கு ஏன் இதுபோன்ற விருதுகளை வழங்கவில்லை என்று அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு நெருக்கமாக இருப்பதாலும், அவரை பாஜகவில் இணைய வேண்டும் என அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, தகுதியும் திறமையும் அறிந்து விருதுகள் கொடுக்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினிக்கு தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை. அவருக்கு அந்த சிறப்புகள் உள்ளன. இன்னும் பல சிறப்பானவர்களும் இருக்கின்றனர். உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

விசிக பொது செயலாளரும், விழுப்புரம் எம்.பி யுமான ரவிகுமார் கூறும்போது, நடன கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலைத்துறையில் அறுபது ஆண்டுகாலம் சாதனை புரிந்தவர் கமலஹாசன் என்று கூறியுள்ளார்.

இதேபோல், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பலரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.