அதிமுக – அமுமுக இணைப்பு சாத்தியமே இல்லை: நமது அம்மா நாளேட்டில் கவிதை வடிவில் எடப்பாடியின் பதில்!

சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவில் இணைவார். அமமுக –அதிமுக இணையும். சசிகலாவின் தூதுவராக பெங்களூரு புகழேந்தி, முதல்வர் எடப்பாடியை சந்தித்தார் என்றெல்லாம், அதிமுகவில் சிலர் சொல்ல அதை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டு வந்தன.

ஆனால், அது சாத்தியம் இல்லை என்பதை, முதல்வர் எடப்பாடி இரண்டாவது  தெளிவாக கூறியுள்ளார். நேற்று வெளிவந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் வெளிவந்த கவிதை மூலம் இந்த பதில் வெளிப்பட்டு இருக்கிறது.

நமது அம்மா நாளேட்டில் வெளிவந்த கவிதையை எழுதியவர் ஆசிரியர் மருது அழகுராஜாக இருந்தாலும், அது முதல்வர் எடப்பாடியின் பதில் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

அப்படி என்றால், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தாலும், மீண்டும் அதிமுகவில் அவரை சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை. அதேபோல், அமமுக – அதிமுக இணைய வாய்ப்பும் இல்லை என்பதே இதன் பொருள்.

நமது அம்மா நாளேட்டில் வந்த கவிதையில், அதிமுக என்பது காளான் அல்ல காவியம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதுபோல், பாஸ்கரன், திவாகரன், தினகரன், சுதாகரன் என்று ஆளுக்கொரு கட்சி வைத்துள்ளனர் என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், சத்திய கோட்டைக்குள் சாத்தான்கள் நுழைய முடியாது என்ற ஒரு கவிதை வெளியாகி இருந்தததும், எடப்பாடியின் குரல் என்றே கூறப்பட்டது.

அதிமுக என்பது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்களின் பின்னணியுடன் வலுவாக இருக்கும் ஒரு இயக்கம்.

இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ, அதிமுகவும் அங்குதான் இருக்கிறது என்பதே தொண்டர்களின் மனநிலையாக உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக தனி அணியாக பிரிந்து பன்னீர்செல்வம் சென்றபோது, அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. ஆனால், அவர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனதும் அவருக்கான செல்வாக்கு சரிந்து விட்டது.

இந்நிலையில், அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக இன்று முதல்வர்  எடப்பாடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி, அவரது தலைமையை உறுதிப்படுத்தி உள்ளது.

அத்துடன், அதிமுகவுக்கு கடந்த மக்களவை தேர்தல் வரை சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அமமுக நிர்வாகிகள் பலர், அதிமுகவுக்கு திரும்பி விட்டனர். சிலர் திமுகவுக்கு போய்விட்டனர். தற்போது அமமுக என்பது வலுவான நிலையில் இல்லை.

இந்த சூழலில் சசிகலாவையோ, அவரது குடும்பத்தினரையோ மீண்டும் அதிமுகவில் இணைத்தால், முதல்வர் எடப்பாடியின் செல்வாக்கும் சரியும், அதிமுகவின் செல்வாக்கும் சரியும்.

இதை நன்கு உணர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்த்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்வாரா? என்றும் அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர்.