ராஜராஜ சோழனின் 1034 வது சதய விழா! உடையாளூரில் நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034 வது சதய விழா அவரது பள்ளிப்படை அமைந்துள்ள கும்பகோணம் உடையாளூரில் நாளை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன.

விழாவில் சோழ வாரிசுகளான பிச்சாவரம் ஜாமீன் குடும்பத்தினர் முன்னிலை வகிக்கின்றனர்.

சோழர் குளத்தின் புகழ் பெற்ற மன்னன் ராஜராஜன், தோல்வியே காணாத மன்னன். படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து, தெற்கு ஆசிய நாடுகள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசாட்சி செய்தவன்.

அதன் காரணமாகவே, ராஜ ராஜ சோழனை மாமன்னன் ராஜ ராஜன் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இவரால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் இன்னும் இவர் புகழை பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.

எனினும், ராஜ ராஜ சோழனின் சமாதியான பள்ளிப்படை, கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இங்கு, கடந்த சில ஆண்டுகளாக, உடையாளூர் மக்கள் , சிவனடியார் திருக்கூட்டம், உடையாளூர் சிவபாத சேகர ஈஸ்வரமுடையார் மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து, ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று, மாமன்னன் ராஜ ராஜனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு வரும் 5 மற்றும் 6 தேதிகளில் உடையாளூரில் ராஜ ராஜனின் 1034 வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அதையொட்டி, செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில், உடையாளூர் கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

பின்னர் திருக்கைலாய வாத்திய முழக்கங்களுடன், பன்னிரு திருமுறை ஊர்வலம் நடைபெறுகிறது. திருக்கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைக்கின்றனர்.

மறுநாள், புதன் கிழமை காலை 6 மணிக்கு கைலாசநாதர் திருக்கோயில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

சோழர்களின் புலிக்கொடிக்கு பூஜை செய்த பின்னர், சோழர்களின் வாரிசான பிச்சாவரம் ஜாமீன் பரம்பரையினர், புலிக்கொடியுடன் ராஜராஜனின் பள்ளிப்படை நோக்கி ஊர்வலமாக செல்கின்றனர்.

பின்னர் மஹாராஜாஸ்ரீ மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் புலிக்கொடி ஏற்றி வைக்கிறார்.

காலை 10 மணிக்கு, பள்ளிப்படையில் யாக பூஜைகளும், பகல் 12 மணிக்கு மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை, சிவபாத சேகர ஈஸ்வரமுடையார் மேம்பாட்டுக்குழு அறக்கட்டளையினர் முன்னின்று கவனித்து வருகின்றனர்.

விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.