ஜெயலலிதாவின் சொத்துக்கள் கணக்கெடுப்பு: நீதிமன்ற அபராதத்தை வசூலிக்க நடவடிக்கை!

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபராத தொகையை வசூலிப்பதற்காக, அவரது சொத்துக்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், கடந்த 2014 ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதி மன்றம், தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

அத்துடன் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதன் காரணமாக ஜெயலலிதா தமது முதல்வர் பதவியை இழந்தார்.

பின்னர் இந்த தீர்ப்பை எதித்து, ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு போரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

அதற்கு பின்னர், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதேசமயம், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நிலையில், தீர்ப்பு வெளிவருவதற்கு முன்னரே, கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா காலமானார்.

அதைத்தொடர்ந்து, கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதி மன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது.. அப்போது, ஜெயலலிதா உயிருடன் இல்லாததால், தீர்ப்பில் ஜெயலலிதா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதனால், தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அபராத தொகையை, ஜெயலலிதா இல்லாத நிலையில் யாரிடம் வசூலிப்பது என்ற கோரிக்கையுடன், கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அபராத தொகையை வசூலிப்பதற்காக, அவரது சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இது தொடர்பாக அனைத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் சார்பில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தண்டனை பெற்ற பின்னர், குற்றவாளி இறந்தாலும், தலைமரைவானாலும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, ஏலம் நடத்தி அபராத தொகையை வசூலிக்க சட்டத்தில் வழி வகைகள் உள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.