வன்னியர் சங்கம் மீண்டும் விறுவிறுப்பாக இயங்க புதிய தலைவராக பு.தா.அருள்மொழி நியமனம்!

வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு மறைந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையில், அந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பு.தா.அருள்மொழி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னியர் சங்கத்தின் முதன்மை செயலாளராக உள்ள பு.தா.அருள்மொழி, வன்னியர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

வன்னியர் சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வன்னியர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பு.தா.அருள்மொழி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்துள்ள புதுப்பூலாமேடு என்ற ஊரை சேர்ந்தவர்.

ஆரம்பகாலத்தில் இருந்தே வன்னியர் சங்கத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். வன்னியர் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். 1989-ம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டவர்.

1998 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு, சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

பு.தா. அருள்மொழி தொடக்க காலத்தில் இருந்து வன்னியர் சங்கத்தில் இருப்பதால், அனைத்து மாவட்ட சமூக மக்களிடம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர்.

காடுவெட்டி குருவின் மறைவுக்கு பிறகு, வன்னியர் சங்க நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கி கிடப்பதால், அதை வேகப்படுத்தும் நோக்கில் புதிய தலைவராக அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பினர்  கூறுகின்றனர்.

மறுபக்கம், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னெடுப்பு பணிகளுக்கும் வன்னியர் சங்கம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், பு.தா.அருள்மொழியே அதற்கு பொருத்தமானவர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.