உள்ளாட்சி தேர்தலில் 2 மாநகராட்சி: பாஜகவின் கோரிக்கையை ஏற்குமா அதிமுக?

தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இதையொட்டி ஒவ்வொரு கட்சியும், தங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடான ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில், 2 மாநகராட்சிகளை கேட்கவிருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் தேரணி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

மக்களவை தேர்தலுடன் இணைந்து நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக   9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தோல்விகளால் துவண்டிருந்த அதிமுகவுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலே ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

இந்நிலையில், பாஜக கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகள், பகுதி வாரியாக அதற்கு கிடைத்துள்ள வாக்கு விகிதங்கள், ஆகியவற்றின் அடிப்படையில், அக்கட்சிக்கு, மாநகராட்சி, உள்ளிட்ட முக்கிய உள்ளாட்சி பதவிகளை ஒதுக்க முடியாது என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

பாஜகவே இரண்டு மாநகராட்சியை கேட்டால், பாமக, தேமுதிக கட்சிகள் எத்தனை மாநகராட்சியை கேட்கும் என்றும் அதிமுகவினர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், பாஜகவுக்கென்று தமிழகத்தில் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் இல்லாத நிலையில், மேயர் போன்ற ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளவர் தேவை என்று பாஜக விரும்புகிறது.

ஆனாலும், அந்த கட்சியின் வாக்கு வங்கி உள்ளிட்டவற்றை கணக்கிட்டால், மேயர் அல்ல, பெரு நகராட்சியை கூட வழங்கமுடியாத நிலைதான் உள்ளது என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.