மகாராஷ்டிரா: பாஜகவை தெறிக்கவிடும் சிவசேனா!

பாஜகவின்  தடயமே இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் கூட, தமது மாஸ்டர் பிரைன் மூலம் காவிக்கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டவர் அம்த்ஷா.

கட்சிகளை உடைப்பது, எம்.பி, எம்.எல்.ஏ க்களை வளைப்பது என ஏதாவது ஒன்றை செய்து, பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை நிலை நிறுத்தியவர் அவர். அதனால், நாடுமுழுவதும் பாஜக கோலோச்சி வருகிறது.

அப்படிப்பட்ட பாஜகவுக்கே மகாராஷ்டிராவில் ஆட்டம் காட்டி வருகிறது சிவசேனா. சிவசேனாவின் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், மூச்சு திணறி வருகிறது பாஜக.

மகாராஷ்டிரா சட்டமன்றப் தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன.

பாசக், சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளன. ஆனால்,  முதல்வர் பதவியை மையப்படுத்தி எழுந்த பூசலால், ஆட்சி அமைக்க முடியாமல் திணறிவருகிறது பி.ஜே.பி.

சிவசேனா தரப்பில் முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா சார்பில் முதல்வர், அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜக முதல்வர், அத்துடன் அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்று தேர்தலுக்கு முன்பே பேசி முடிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையுமே பாஜக ஏற்க மறுக்கிறது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் இருக்கிறது.

இதை சரி செய்யும் வகையில், பாஜக தலைவர் அமித்ஷா, மும்பை வந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச முடிவு செய்தார். ஆனால், அவரை சந்திக்க உத்தவ் தாக்கரே மறுத்து வருகிறார்.

அமித்ஷாவை சந்திக்க உத்தவ் தாக்கரே மறுப்பு தெரிவித்து வருவது பாஜகவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமித்ஷாவின் மாஸ்டர் மைன்ட் வகுக்கும் திட்டங்கள் இதுவரை தோல்வி அடைந்தது இல்லை. ஆனால், மகாராஷ்டிரா விஷயத்தில் அது எடுபடவில்லை.

அதனால், உத்தவ் தாக்கரே மீது, மத்திய அரசு வேறு வகையில் அழுத்தம் மற்றும் நெருக்கடி கொடுக்கலாம். அப்படி எந்த நெருக்கடி கொடுத்தாலும், பாஜகவுக்கு பணிந்து போக வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தயார் நிலையில் இருக்கிறது சிவசேனா.

இதுவரை, மும்பை மாநகரம் மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றே சிவசேனா கருதும். ஒட்டுமொத்த மாநிலமும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

மறுபுறம், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களையும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசி வருவது பாஜகவுக்கு நெருக்கடியை தந்துள்ளது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை, சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பும், மகராஷ்டிரா அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.