குமாரசாமி ஆட்சி கவிழ்ப்புக்கு அமித்ஷாவே காரணம்: எடியூரப்பா ஆடியோவால் புதிய சர்ச்சை!

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பெற்கும் போதேல்லாம், அவருக்கு ஏதாவது ஒரு சிக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா, அப்போதைய கர்நாடக ஆளுநரால் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும், முதல்வராக பொறுப்பேற்றும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால், காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வரானார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், அமித்ஷா மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப்பட்டதாக கூறும், முதலமைச்சர் எடியூரப்பாவின் ஆடியோ  ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதும், போதிய பெரும்பான்மை இல்லை. இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்தார்.

ஆட்சி அமைந்து சில மாதங்களில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக, அந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கியதால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

பின்னர் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், பாஜக நிர்வாகிகளிடம் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள அந்த ஆடியோவில், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்தது அமித்ஷாதான் என்று கூறுவது போல பதிவாகியுள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கவைக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தும் அமித்ஷாவுக்கு தெரிந்தே நடந்ததாக எடியூரப்பா கூறுவது போலவும் ஆடியோ பதிவாகியுள்ளது.

நம்மை ஆளுங்கட்சியாக்கியுள்ள அந்த 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பக்கம் பாஜகவினர் நிற்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மதிப்பளித்து முறையாக நடத்த வேண்டும் என்றும் எடியூரப்பா கூறுவதாக ஆடியோவில் உள்ளது.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து எடியூரப்பா கேள்வி எழுப்பவில்லை என்பதோடு, கட்சியின் நலன் கருதி பாஜகவினரோடு அவ்வாறு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,  பணம் மற்றும் அதிகாரத்தை பாஜக எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது அம்பலமாகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

அமித்ஷாவும் எடியூரப்பாவும் செய்தது ஜனநாயகப் படுகொலைக்கான சதி என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் குற்றம் சாட்டியுள்ளார்.