திமுக பொதுக்குழு கூட்டம்: பதவிகளுக்கு காத்திருக்கும் பொன்முடி – நேரு – எ.வ.வேலு! 

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 10-ம் தேதி ராயப்பேட்டை ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என்று பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தோல்வி, கட்சியின் சட்ட விதிகளை திருத்துவது, தணிக்கை குழு அறிக்கை உள்ளிட்ட மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சட்ட விதிகள் திருத்தம் இருப்பதால், பொன்முடி, நேரு ஆகியோருக்கு துணை பொது செயலாளர், பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பேராசிரியர் இருக்கும் வரை பொது செயலாளர் பதவி அவரிடமே இருக்கட்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தாலும், படுத்த படுக்கையாக இருக்கும், அவரிடம் அறிக்கைக்கான கையெழுத்து மட்டுமே பெற முடிகிறது.

இது அறிவாலய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சில கேள்விகளை உருவாக்குகிறது. எனவே, பொது செயலாளர் பதவியை துரைமுருகனுக்கு வழங்கிவிட்டு, எ.வ.வேலுக்கு பொருளாளர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

அத்துடன் கடந்த ஜூலை மாதம் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, இந்த பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்பட இருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் படுதோல்வியை  திமுகவினரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. எனவே திமுக படுதோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து பொதுக்குழுவில் காரசாரமாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அதில், பொன்முடியின் தேர்தல் அணுகுமுறை குறித்தும் நிர்வாகிகள் குறைகளைத் தெரிவிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியொரு தோல்வி ஏற்பட்டுள்ள சூழலில், புதிய பதவிகளை நிரப்புவதற்கான மனநிலையில் தலைமை இருக்குமா? என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

கட்சியின் சட்டதிட்டங்களில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், அந்த மாற்றங்கள் பதவியை ஒட்டியதாக இருக்காது என்றும் சிலர் கூறுகின்றனர்.

குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஆளும்கட்சியின் அதிகாரத்தை மீறி, வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றியே  பொதுக்குழுவில் ஆலோசிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

எனினும், பொதுக்குழு, தலைவருக்கும், இளைஞர் அணி செயலாளருக்கு  புகழ்பாடும் கூட்டமாக இல்லாமல், அனைவருக்கும் பேச வாய்ப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் திமுகவினர் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.