ஜாதகப்படி உங்களுக்கு எப்போது பணம் வரும்?

ஒருவருடைய ஜாதகத்தில், அவருடைய வருவாயை தீர்மானிப்பதில் இரண்டாம் அதிபதி, பதினோராம் அதிபதி, குரு, சுக்கிரன் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

ஆகவே, இரண்டாம் அதிபதி, பதினோராம் அதிபதி, சுக்கிரன், குரு ஆகியோர் கெட்டு போகாமல் இருப்பது நல்லது. இரண்டு, பதினோராம் அதிபதிகள் கெட்டு, குரு, சுக்கிரனும் கெட்டால், பிச்சை கூட கிடைக்காது என்று பழமையான ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இரண்டாம் அதிபதி மற்றும் பதினோராம் அதிபதிகள்,  லக்னத்தில் இருந்து, முதல் மூன்று ராசிகளுக்குள் இருந்தால், முப்பது வயதுக்குள் பணம் சம்பாதித்து வசதியானாலும், அது கடைசி வரை நிலைப்பதில்லை.

ஆனால், நான்கு ராசிகளுக்கு பின்னால் அவை இருந்தால், நாற்பது வயது வரை பணத்திற்கு சிரமப்பட வைத்து விடுகின்றன.

ஆகவே,. இவற்றில் ஏதாவது ஒன்று முதல் மூன்று ராசிகளுக்குள்ளும், மற்றொன்று, நான்கு ராசிகளுக்கு பிறகும் அமைந்திருப்பதே நல்லது.

ஆனால், நாம் நினைப்பது போல் அமையுமா? அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அவை அமைகின்றன

.அதேபோல், ஒருவருக்கு வருமானம் எப்போது வரும், எதுவரை தொடரும்? என்பதை தீர்மானிப்பதில், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுக்கிரன் சிறு வருவாய், அதாவது அன்றாட வாழ்க்கையை நடத்த தேவையான பணத்தை தரும் கிரகமாகும். குரு, சேமிக்கும் அளவுக்கு பணத்தை தரும் கிரகம் ஆகும்.

எனவே, ஒரு ஜாதகத்தில், குருவோ அல்லது சுக்கிரனோ லக்னத்தில் இருந்து முதல் ஆறு ராசிக்குள் இருந்தால், அவர் நாற்பது வயதுக்குள் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்.

அவ்வாறு இல்லாமல், ஆறு கட்டத்திற்கு மேல் இருந்தால், நாற்பது வயதுக்கு மேல்தான் சம்பாதிக்க ஆரம்பிப்பார்.

அதற்குமுன், வரும் வருவாய் எல்லாம், அவருடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மட்டுமேதான் சரியாக இருக்குமே ஒழிய, மிச்சப்படுத்துவது என்பது கடினம்.

குரு அல்லது சுக்கிரன், லக்னத்திலேயே இருந்தால், அவர் பிறந்த உடனேயே, அவரது குடும்பத்திற்கு வருவாய் வர ஆரம்பித்து விடும். ஆனால், அவருடைய பிற்கால வாழ்க்கையில், பணத்திற்கு சிரமம் ஏற்படும்.

இரண்டாவது இடத்தில் இருந்தால், இருபது வயதில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார். மூன்றாவது இடத்தில் இருந்தால், முப்பது வயதில் சம்பாதிக்க ஆரம்பிப்பார்.

நான்காவது கட்டத்திற்கு மேல் குரு, சுக்கிரன் இருந்தால், அவருக்கு தேவையான பணம், நாற்பது வயதுக்கு மேல்தான் வர ஆரம்பிக்கும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல, சுக்கிரன் சிறு பணத்தை, அதாவது அன்றாட செலவுகளுக்கான பணத்தை தருபவன் என்பதால், குருவுக்கு முன்பே சுக்கிரன் இருந்தால், ஆரம்பத்தில் சிறு பணமும், நாற்பது வயதுக்கு மேல் சேமிக்கும் அளவுக்கு பணமும் வரும்.

குரு ஆரம்பத்தில் இருந்து, சுக்கிரன், பின்னால் இருந்தால், ஆரம்பத்தில் அதிக பணமும், பின்னர், அந்த வருவாயின் அளவு குறைந்து, சிறு பணமாகவும் வரும்.

ஆகவே, சுக்கிரனுக்கு பின் குரு இருந்தால், லட்சாதிபதியாக இருந்து கோடீஸ்வரன் ஆவார். குருவுக்கு பின்னால் சுக்கிரன் இருந்தால், கோடீஸ்வரனாக இருந்து லட்சாதிபதி ஆவார்.

இவை பொதுவான பலன்களே. அவரவர் ஜாதகத்தை பொருத்தும், தசா புத்தியை பொருத்தும் பலன்கள் மாறுபடும்.