தேர்தல் களம் சாதிய களமானதால் விக்கிரவாண்டியில் தோல்வி: ஸ்டாலினுக்கு உணர்த்தும் திருமாவளவன்!

விக்கிரவாண்டி தேர்தல் களம், சாதீய சக்திகளின் களமாக மாறியதன் காரணமாகவே திமுக தோல்வி அடைந்தது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியை தோற்கடித்தார்.

படுதோல்வியை சந்தித்த திமுகவுக்கு இது கடும் அதிர்ச்சியாக இருந்தது என்றால், அமோக வெற்றி பெற்ற அதிமுகவுக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து, தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில், திமுக கூட்டணியின் தவறான வியூகத்தால் தோல்வி அடைய நேர்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.

இதை நான் சுய விமர்சனமாகவே முன்வைக்கிறேன். திமுக அதிமுகவுக்கான தேர்தல் அரசியல், எங்கள் கூட்டணியில் தேர்தல் உத்தியால், திமுகவுக்கும் சாதீய சக்திகளுக்குமான களமாக மாறிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

பாமக களத்திற்கே வராத நேரத்தில் திமுக திடீரென வன்னியர் சமுதாயத்துக்கான ஓர் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதிமுக அமைதியாகவே இருந்தது.

திமுக இந்த அஸ்திரத்தை கையில் எடுத்தவுடன் பாமக நேரடியாக களத்தில் இறங்கியது. அதனால், திமுகவா? பாமகவா? என்ற நிலயை ஏற்பட்டு விட்டது.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் என்பது  வன்னியர் அல்லாத தலித அல்லாத சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்பும் திமுக தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வன்னியர் விவகாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுக்காமல் இருந்திருந்தால், பாமக இந்த அளவுக்கு ஆக்ரோஷமாக களம் இறங்கி இருக்காது என்றும் அப்போதே பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.