தமிழக உள்ளாட்சி தேர்தல்: தயாராகும் கட்சிகள்!

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்களது நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த தொடங்கி உள்ளன.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அதிமுகவிற்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அம்முகவில் உள்ள பலரையும் அதிமுகவின் பக்கம் கொண்டு வர, தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அமமுகவில் இருந்த நிர்வாகிகள் பலர் ஏற்கனவே அதிமுகவிற்கு வந்து விட்டனர். சிலர் திமுகவிற்கு சென்று விட்டனர். எனினும், தென்மாவட்டத்தில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளை வளைப்பது அதிமுக மற்றும் திமுகவிற்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தமது நிர்வாகிகளை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார் தினகரன். முக்கிய பொறுப்பாளர்கள் பலரிடமும் அவரே நேரடியாக பேசி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டங்களில், வெற்றி வாய்ப்புள்ள உள்ளாட்சி அமைப்புகள், செல்வாக்குள்ள உள்ளூர் தலைவர்கள் ஆகியோரின் பட்டியலை தமக்கு அளிக்குமாறும் அவர் உத்தரவு போட்டுள்ளார்.

அதேபோல், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய வைகோ, திமுகவுடன் கூட்டணியில் உறுதியாக இருக்கும் நாம், உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுவோம். அதற்கான சரியான இடங்கள், பிரமுகர்கள் போன்றவற்றை, ஆலோசனை கூட்டம் நடத்தி, தேர்வு செய்து பட்டியலை என்னிடம் தாருங்கள் என்று கோரியுள்ளார்.

மேலும் நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் அது இருக்கக்கூடாது, பொதுவெளியில் வாட்ஸ் அப் போன்றவற்றில் செயல்பட்டுவிட கூடாது என்றும் எச்சரிக்கை கலந்தும் அவர் கூறி இருக்கிறார்.