மக்களை கவர மாநில அளவிலான பயணம்: முதல்வர் எடப்பாடி புது திட்டம்!

  • ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்று மூன்று  வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அவர் சேலத்துக்கும் சென்னைக்குமே அதிக அளவில் பயணங்களை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. அதை ஒட்டி நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும், பல தொகுதிகளை திமுகவிடம் இழந்தது.

ஆனால், வேலூரில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும், வாக்கு வித்யாசம் என்பது எட்டாயிரம் வாக்குகளாகவே இருந்தன.

அதன் பின்னர் நடந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி, அதிமுகவில், எடப்பாடியின் தலைமையை உறுதிப்படுத்தி உள்ளது.

அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளாராக துணை முதல்வர்  பன்னீர்செல்வம் இருந்தாலும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர் எடப்பாடியால் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

தற்போது, அதிமுக என்ற கட்சியிலும், ஆட்சியிலும் எடப்பாடி ஒரு அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து விட்டார்.

இருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்காக வலம் வரும் அமைச்சர்கள், தங்களது மாவட்டத்தில் முதல்வருக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

இதனால், அவர் சேலத்திற்கும் சென்னைக்கும் இடையிலேயே பயணப்பட்டு கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், திமுகவில் கடந்த முறை ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே யாத்திரை, ஆந்திராவில் ஜகன்மோகன் நடத்தும் யாத்திரை, கேரளாவில் பாஜக நடத்திய யாத்திரை போல, தமிழகம் முழுவதும் அவரை முன்னிலை படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு யாத்திரை நடத்த, முதல்வருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

இவ்வாறு முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திலும் யாத்திரை நடத்தும்போது, மாவட்ட அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் உடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அந்த சூழலில், பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தலாம். இது, மக்கள் மத்தியில் முதல்வருக்கு என்று ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்தும் என்று, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி உள்ளனர்.

இது, முதல்வருக்கும் மிகவும் பிடித்துள்ளது. எனவே, அடுத்து முதல்வர் தரப்பில், தமிழகம் முழுவதும் வலம் வரும் வகையில் ஒரு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருப்பதால், அதற்கு பின்னர் முதல்வரின் தமிழகம் தழுவிய யாத்திரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை, உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போனால், அதற்கு முன்னர் முதல்வரின் யாத்திரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எப்படியும், தாமும் ஒரு மக்கள் தலைவர் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு, தமிழகம் தழுவிய யாத்திரை பயனுள்ளதாகவே இருக்கும் என்பதே அவரது ஆதரவாளர்களின் கருத்து.