ரூ. 12 கோடி செலவில் கீழடியில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு!

கீழடியில் 12 கோடி ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி முதல் முறையாக தமிழக அரசின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நேற்று  கொண்டாடப்பட்டது.

விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய முதல்வர், தமிழகத்தின் வரலாறும், தமிழக மக்களின் வாழ்வும் தொன்மை மிக்கது என்றார்.

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றி பேரறிஞர் அண்ணா சாதனை படைத்தார்.

இந்திய கண்டத்திலேயே எழுத்தறிவு பெற்ற முதல் சமூகம் தமிழ் சமூகமே. கப்பல் கட்டும் தொழிலில் தமிழர்களே உலகின் முன்னோடிகளாக திகழ்ந்துள்ளனர்.

தமிழரின் விருந்தோம்பலை, சீன அதிபர் மிகவும் பாராட்டியுள்ளார் என்றும் பெருமிதத்துடன் முதல்வர் குறிப்பிட்டார்.

கீழடி அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம், கொந்தகை கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.