திரைத்துறைக்கு அளப்பரிய பணி: ரஜினிக்கு மத்திய அரசு விருது!

திரைத்துறைக்கு அளப்பரிய பணியை பாராட்டி மத்திய அரசு நடிகர் ரஜினிக்கு விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.  கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த். 1975-ல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர், இன்றும் இளம் நடிகர்களை விஞ்சிய வசூல் நாயகனாகத் திகழ்கிறார்.

இவரது திரைத்துறை சேவையை கவுரவிக்கும் விதமான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக சினிமா நட்சத்திரமான ரஜினிகாந்தின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அடையாளமாக விருது வழங்கப்படுகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

வருகிற 20-ம் தேதி கோவாவில் தொடங்கி நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விருது அறிவிக்கப்பட்டதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா பொன்விழாவையொட்டி இந்த உயரிய கவுரவத்தை வழங்கியிருப்பதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டதை தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வரவேற்று பாராட்டி கருத்து தெரிவித்து வருகிறார்கள்