சுகாதாரத்துரையில் அமைச்சர் செய்வதை எல்லாம் வெளியிட வேண்டி வரும்: போராடும் மருத்துவர்கள் எச்சரிக்கை!

அரசின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறியுள்ள மருத்துவர்கள், சுகாதாரத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை நாங்கள் வெளியிட வேண்டிய சூழல் வரும் என்று கூறியுள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரகாலமாக அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் செய்யப்படும், பணிநீக்கம் செய்யப்பட்டு, புதிதாக மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பிரேக் இன் சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு பணியிட மாற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள மருத்துவர்கள், திருச்சியில், பிரேத பரிசோதனை செய்ய மாட்டோம் என அறிவித்தனர்.’

இந்நிலையில், மாலைக்குள் பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் வேலை இழந்ததாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேண்டுமென்றே பணிமாற்றம் செய்வது, வேலையை விட்டு தூக்கிவிடுவோம் என மிரட்டுவது, வீட்டுக்குப் போலீஸை அனுப்புவது போன்ற வேலைகளை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மருத்துவர்களின் இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், திராவிடர் கழக பொதுசெயலாளர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் மருத்துவர்களும் அமைச்சரை விட பொறுப்பானவர்களாகத்தான் இருக்கிறோம். ஒரு அமைச்சராக அவர் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

இல்லையென்றால் சுகாதாரத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை நாங்கள் வெளியிட வேண்டிய சூழல் வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

போராடிவரும் ”மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பணி மாற்று ஆணையை எங்கள் கல்லூரியில் அமல்படுத்த முடியாது” என விழுப்புரம் மருத்துவக் கல்லூரியின் டீன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் போராட்டத்துக்கு, மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களின் ஆதரவு இருந்துவந்த நிலையில்  தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் ஆதரவும் கிடைத்திருப்பது போராடிவரும் மருத்துவர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.