மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: சரத்பவாருடன் சிவசேனா கட்சியினர் சந்திப்பு!

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா இடையே  ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு, மகாராஷ்டிரா அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக – சிவசேனா இடையே சுமூக தீர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்று இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபையில், மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜக – சிவசேனாவுக்கு ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்கள் கிடைத்துள்ளன.

இருப்பினும் இரு கட்சிகளிடையே 50 க்கு 50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இரு தரப்பினரும் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டு காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் தாக்ரே, முதல்வர் பட்னாவிஸ் ஆகிய இருவரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை , அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர்.

இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

சரத்பாவரின் தேசியவாத காங்கிரசுக்கு 54 எம்.எல்.ஏ க்களும், காங்கிரஸ் கட்சிக்கு  44 எம்.எல்.ஏக்களும் இருப்பதால், பாஜக ஆதரவு இல்லாமலே சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியும்.

இந்த நிலையில், சரத்பவாரை சிவசேனா தலைவர்கள் சந்தித்து பேசி இருப்பது, பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.