நாடாளுமன்ற கட்டிடத்தை மாற்றக்கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்!

மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அழகும் தனித்துவமும் நிறைந்த தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தை கைவிட்டுவிடாதீர்கள் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி யுமான டாக்டர் கரன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றம் டெல்லியில் உள்ள சன்சத் பவனில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் 1927-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து, குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுக்கு, டாக்டர் கரன்சிங் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

தற்போதைய வட்ட வடிவிலான நாடாளுமன்ற கட்டிடம், அழகும் தனித்துவமும் நிறைந்தது. புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தை எந்த விதத்திலும் கைவிட்டு விடக்கூடாது.

நாடாளுமன்றம் மாறும்போது, இந்த கட்டிடத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும். எனவே, புதிய கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக, தற்போதைய கட்டிடத்தில் தேவையான மாற்றத்தை செய்யலாம்.

நாடாளுமன்றத்தில் கூடுதல் உறுப்பினர்கள் அமரும் வகையில், மாநிலங்கள் அவையாக செயல்படும் மைய மண்டபத்தை மக்களவையாகவும், மக்களவையாக செயல்படும் அரங்கை மாநிலங்களைவயாக மாற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் டாக்டர் கரன்சிங் கூறியுள்ளார்.