இந்தியாவின் அசுத்தமான 10 ரயில் நிலையங்களில் 6 நிலையங்கள் சென்னையில்: பயணிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு சுத்தமான 10 நிலையங்கள், அசுத்தமான 10 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் ஒரு நிலையம் கூட சென்னையில் இடம்பெறவில்லை. ஆனால், அசுத்தமான ரயில் நிலையங்களில்  6 நிலையங்கள் சென்னையில் இடம்பெற்றுள்ளன. இது ரயில்வே பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2016-ம் ஆண்டுமுதல் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றன.

இதன்படி,  இந்திய ரயில்வே,  தனியார் தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து நாட்டிலுள்ள 720  ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மையான மற்றும் அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், தூய்மையான ரயில் நிலையங்களின்  டாப் 10 பட்டியலில், தமிழகத்தில் இருந்து ஒரு ரயில் நிலையமும்  இடம்பெறவில்லை.

அசுத்தமான ரயில் நிலையங்களின் டாப் 10 பட்டியலில், 6  இடங்கள் சென்னையில் இடம்பபெற்றுள்ளன. அவை பெருங்களத்தூர், கிண்டி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோயில், பழவந்தாங்கல் ஆகும்.

இது தவிர, டெல்லியின் -சதார் பஜார், கேரளாவின் – ஒத்தப்பாலம், பீகாரின் – அராரிய கோர்ட், உத்திரபிரதேசத்தின் – குர்ஜா ஆகியவையும் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தூய்மையான பத்து ரயில் நிலையங்களில் பட்டியலில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், துர்காபூர், காந்திநகர்-ஜே-பி, சூரத்கர், உதய்பூர் சிட்டி, ஆஜ்மீர் ஏழு ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. ஜம்முவின்-தவை, ஆந்திராவின்-விஜயவாடா, உத்தர்காண்டின் – ஹரித்வார் ஆகிவை இடம்பெற்றுள்ளன.