ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் விக்கிரவாண்டியில் எடுபடவில்லை: அன்புமணி ராமதாஸ்!

திமுக தலைவர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் விக்கிரவாண்டியில் எடுபடவில்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடான கூட்டணி தொடரும் என்றும் அவர் கூறினார்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம், நங்கமங்கலம், புதூர் கிராமத்தில் அன்புமணியின் முப்படை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி, தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்கான எழுச்சியை கிராமம் தோறும் கொண்டு வரவேண்டும் என்றார்.

இளைஞர்கள் அதிகமாக உள்ள ஒரே கட்சி பாமகவே என்றார். வீடுவீடாகச் சென்று, `அன்புமணியின் தம்பி வந்திருக்கிறேன், தங்கை வந்திருக்கிறேன்’ என்று மக்களைச் சந்தித்துப் பேசுங்கள்.

மதுவுக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்ததும் போராடியதும் நாம்தான். அதன்பிறகே அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்திவருகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொய்களைக் கூறி வெற்றிபெற்றார். அவரின் பொய்ப் பிரசாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எடுபடவில்லை’’ என்றார்.

நீட்  தேர்வு என்பது தேவையற்றது. நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், சி.பி.ஐ விசாரணை அமைக்கவேண்டும்.

டிசம்பரில் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், காவிரி, மேகதாது,  மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்தின் நலன் காக்கக் குரல் எழுப்புவேன் என்றும் கூறினார்.