விலை வீழ்ச்சியிலும் விவசாயிகளை காக்கும் புதிய சட்டம்: தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக, விலை வீழ்ச்சி காலத்திலும், விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் தமிழக அரசு, புதிய சட்டம் இயற்றியுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின்படி,  ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்ட பாதுகாப்பு உண்டு.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைக் காக்க அரசு இயற்றிய இந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்து, முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இந்த சட்டத்திற்கு சில விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர், இந்த சட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சில லெட்டர் பேட் அமைப்புகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், இந்த சட்டம் விவசாயிகளை கட்டாயப்படுத்துவதில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். விலை வீழ்ச்சிக் காலங்களில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.