தீவிரமடையும் அரசு மருத்துவர்கள் போராட்டம்: பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என அறிவிப்பு!

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள், திருச்சியில் நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபட மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பினர் சார்பில் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பணிக்கு திரும்பாவிட்டால் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாராதாரத்துரை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ப்ரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு மருத்துவர்கள் ஐந்து பேருக்கு பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை நிறைவேற்ற சொன்னால் எப்படி முடியும் என்றும், அரசு மருத்துவர்களின் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று முதல்வர் எடப்பாடி கூறி இருந்தார்.

மேலும் மக்கள் நலன் கருதி மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த எச்சரிக்கைகளையும் மீறி, அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நாளை முதல் பிரேத பரிசோதனையில் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

டெங்கு உள்ளிட்ட மழைக்கால தொற்றுநோய்கள் வேகமாக பரவும் அபாயம் உள்ள நிலையில், அரசு மருத்துவர்களின் இந்த போராட்டம் கவலை அளிப்பதாக உள்ளது.

அரசின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருவதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிர  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தமது டுவிட்டர் பதிவில், அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் – அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ்  மற்றும் நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.