பண்டார வன்னியனின் சரியான நினைவு தினம் எது?

இலங்கை வரலாற்றில் மாவீரனாக கருதப்படும், தமிழ் மன்னன் பண்டார வன்னியனை, உயிருடனோ கொன்றோ பிடிக்க முடியாமல் அவமானத்திற்கு ஆளானான் ஒல்லாந்து கேப்டன் வான்டரி பேக்.

அந்த அவமானத்தை தாங்கமுடியாத அவன், 1803 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ம் தேதி, பண்டார வன்னியன்  இறந்து விட்டதாக, கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை வைத்து விட்டு சென்றான்.

ஆனால், அதன்பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 1811 ம் ஆண்டு, பெரும்படையை திரட்டி, உடையாவூரில் ஆங்கிலேயருக்கு எதிராக பண்டார வன்னியன் போர் புரிந்துள்ளான்.

இந்த போரில் பண்டார வன்னியன் தரப்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பண்டார வன்னியன் படுகாயமுற்றான். எனினும், எதிரிகள் கைகளில் சிக்காமல் காப்பாற்றி, அவனை மறைவிடத்தில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் அவன் உயிரைக்காப்பற்ற முடியவில்லை.

தினமணியில் எழுத்தாளர் பாவை சந்திரன் எழுதிய “ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு” என்ற தொடரில் இந்த தகவல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “தமிழ் கனடியன்” என்ற இணையதளத்திலும் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தமிழர்களை பொறுத்தவரை, 1997 ம் ஆண்டு முதல் ஆகஸ்ட்  25 ம் தேதியையே, பண்டார வன்னியன் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

பண்டார வன்னியன் காலத்தில் முல்லைத்தீவு கரையோரத்தை கைப்பற்றிய வெள்ளையர்கள், அங்கே படைத்தளம் ஒன்றை அமைத்திருந்தனர்.

அந்த படைத்தளம் மீது பண்டார வன்னியன் தாக்குதல் நடத்தி அதை நிர்மூலமாக்கினான். அப்போது அவர்களுடைய இரண்டு பீரங்கிகளையும் அவன் கைப்பற்றினான். அது ஆகஸ்ட் மாதம் 25 ம் தேதி என்பதால், அந்த நாளையே பண்டார வன்னியன் நினைவு தினமாக அனுசரிக்கின்றனர்.

டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.

1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”