மகாராஷ்டிரா இழுபறி முடிவுக்கு வந்தது: சிவசேனாவுக்கு துணை முதல்வர் வழங்க பாஜக ஒப்புதல்!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாசக் – சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வந்தது.

ஆனால், முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக சம்மதிக்கவில்லை. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் கடந்த ஒரு வார காலமாகவே இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் பல முக்கிய துறைகளும் சிவசேனாவுக்கு விட்டுத்தர பாஜக நேற்று சம்மதித்தது.  இதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை தரவேண்டும் என்று வலியுறுத்தி வந்த மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், மகாராஷ்ட்ரா மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிவசேனா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

துணை முதல்வர் பதவியோடு, பொதுப்பணித்துறை, கிராமப்புற வளர்ச்சி, தொழில்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் சிவசேனாவுக்கு வழங்கப்பட உள்ளது.

இதையடுத்து, பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும். மற்ற பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் பேசி தீர்த்துக் கொள்ளப்படும் என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ர சட்டசபை. பாஜக இந்த தேர்தலில் 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 தொகுதிகளை வென்றுள்ளது.