திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு எதிராக கசியும் தகவல்கள்: சமாளிப்பரா?

விக்கிரவாண்டி இதைத்தேர்தல் பிரச்சாரத்தில் வன்னியர்களை மையப்படுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, காரசாரமாக எதிர் அறிக்கை வெளியிட்டார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

அந்த அறிக்கையில், திமுக பொருளாளர் துரைமுருகனின் அதிகாரத்தை, ஸ்டாலின் துதிபாடிகளே பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு, துரைமுருகன் தரப்பில் இருந்து எந்தவிதமான மறுப்பு அறிக்கையும் வரவில்லை. அவர் அமைதியாகவே இருந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன், ஆசிரியரிடம் ஒரு வாரம் விடுப்பு கேட்பதுபோல, உடல்நிலை சரியில்லை, அதனால் தமக்கு ஒரு வாரம் விடுப்பு வேண்டும் என்று துரைமுருகன் ஸ்டாலினிடம் கேட்டார்.

அந்த விடுப்பில், மக்களவை தேர்தலின்போது, வருமானவரித்துறை சோதனையால் பாதிக்கப்பட்ட, தமது நண்பர் பூஞ்சோலை சீனுவாசன் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகளுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், பழைய நன்றிக்கடனுக்காக துரைமுருகனுக்காக உதவி செய்தார்.

தமக்கு தெரியாமல், துரைமுருகன் பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதால், அவர் மீது ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் என்று ஒரு தகவல் கசிய விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, துரைமுருகன் தரப்பிலோ, ஸ்டாலின் தரப்பிலோ எந்த தகவலும் இல்லை.

ஆனால், சின்ன சின்ன விஷயங்களில் சில இடைவெளிகள் இருப்பதை பயன்படுத்தி இதுபோன்ற சில தகவல்களை சிலர் கசிய விட்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

திமுக பொருளாளர் பதவியில் அமர, ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சிலர் முயற்ச்சித்தனர். ஆனாலும், சீனியர், சிறந்த பேச்சாளர், சட்டமன்ற அனுபவம் மிக்கவர் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு துறைமுருகனே பொருளாளராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார்.

எனினும், அதை விரும்பாத சிலர் இதுபோன்ற தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூறாதவரை, எதிலும் தெளிவாக முடிவுக்கு வர முடியாது.

இதுபோன்ற தகவல்களை பார்க்கும்போது, விக்கிரவாண்டியில் ஸ்டாலினுக்கு பதில் அறிக்கையில் பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்ன விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.