விக்கிரவாண்டி தோல்வி: திமுகவில் பொன்முடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தேர்தலில் வெற்றி பெற்றால், தலைவர்களே வெற்றிக்கு காரணம் என்று தீர்மானம் போடுவதும், தோல்வி அடைந்தால், சம்பந்தப்பட்ட ஏரியா  நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்பதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்  தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கை.

அந்த வகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததால், மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான பொன்முடிக்கு நெருக்கடி முற்ற ஆரம்பித்துள்ளது.

மாவட்ட அளவிலான திமுக நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்ற  கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. மறுபக்கம், பொன்முடிக்கும்  இளைஞர் அணி உதயநிதியின் எதிர்ப்பும் ஆரம்பமாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பொன்முடி பரிந்துரைத்த, புகழேந்தியே திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தொகுதிக்கு வெளியே இருக்கும் புகழேந்திக்கு பதில் உள்ளூரை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அப்போதே எழுந்தது.

ஆனால், பொன்முடியின் பரிந்துரையை நிராகரிக்க முடியாத ஸ்டாலின், புகழேந்தியை வேட்பாளராக அறிவித்தார்.

மறுபக்கம், பொன்முடிக்கு சமூக ரீதியாக மாவட்டத்தில் இருக்கும் எதிர்ப்பு தேர்தல் நேரத்தில் மிகவும் அதிகமானது. அத்துடன், கட்சிக்காரர்களை அவர் மதிப்பதில்லை என்ற புகாரும் எழுந்தது.

எனினும், ஜெகத்ரட்சகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு போன்றவர்கள் தொகுதிக்குள் அனுப்பபட்டு தேர்தல் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.

அதேசமயம், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

ஆனாலும், அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின், தேர்தல் பணிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திமுக தடுமாறியே வந்தது.

இப்படி பல காரணங்களால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இடைத்தேர்தலில், ஆளும் கட்சி வெற்றி பெறுவது சகஜம்தான் என்றாலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வியை தழுவி இருப்பது, அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் பொன்முடியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு முன், தொகுதி எம்.பி யான விசிக ரவிகுமாரிடம் ஸ்டாலின் கலந்து பேச வேண்டும். மாவட்ட அளவிலான நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் திமுகவில் வலுத்துள்ளன.

அதேபோல் உதயநிதியும் பொன்முடி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவில் உள்ள சீனியர்கள் தலைவர் ஸ்டாலினிடம் பவ்யம் காட்டிவிட்டு, தமக்கு கீழ் உள்ள தொண்டர்களிடம் அதிகார தோரணையில் நடந்து கொள்வதாகவும், அவருக்கு சொல்லப்பட்டுள்ளது.

இப்படி பல நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் பொன்முடிக்கு, திமுகவில் நெருக்கடி முற்றுகிறது, அதனால், அவர் மாவட்ட செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.