முதல்வர் பதவிக்கு பாஜக – சிவசேனா இடையே கடும் போட்டி: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்றினாலும், இரு கட்சிகளுமே முதல்வர் பதவியை விட்டுத்தர மறுப்பதால், அங்கு ஆட்சி அமைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

288 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56  தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 145 எம்.எல்.ஏ க்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், பாஜகவுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஆனால், தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முதல் இரண்டரை ஆண்டு காலம், முதல்வர் பதவியை வழங்க வேண்டும். உள்துறை அமைச்சர் உள்ளிட்ட ஐம்பது சதவிகித அமைச்சர் பதவிகள் வழங்கவேண்டும் என பாஜகவுக்கு சிவசேனா நிபந்தனை விடுத்துள்ளது.

ஆனால், முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக மறுத்து வருகிறது. மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ க்கள் பத்து பேரின் ஆதரவையும் பாஜக பெற்றுள்ளது.

இதையடுத்து, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் தனித்தனியே, ஆளுநர் பகத்சிங்கை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில், சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்குவதாக பாஜக எந்த உத்திரவாதமும் வழங்கவில்லை என்று முதல்வர் பட்நாவிஸ் கூறினார். இது, சிவசேனா தரப்பில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பதில் அளித்து பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  ஆட்சியில் சிவசேனாவுக்கு சமபங்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று, பட்நாவிஸ் கூறிய பிறகு, ஆட்சி அமைப்பது குறித்து இரு கட்சிகள் பங்கேற்பதாக இருந்த கூட்டத்தை எங்கள் தலைவர் ரத்து செய்து விட்டார் என்று கூறினார்.

மேலும், ஹரியானாவை போல் மகாராஷ்டிராவில் யாரும் துஷ்யந்த் இல்லை. யாருடைய உறவினர்களும் சிறையில் இல்லை. சத்தியம் மற்றும் தர்மத்தின் அடிப்படையில்தான் சிவசேனா கட்சி இயங்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சிவசேனாவை சேர்ந்த 45 எம்.எல்.ஏ க்கள் தங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர் என்று பாஜக எம்.பி.சஞ்சய் காக்கடே, அளித்த ஒரு பேட்டி, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான விரிசலை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.

இதனால், சிவசேனா மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, மகாராஷ்டிராவின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.