உயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா?  ஆழ்துளைக் கிணறு வழக்கில்  உயர்நீதிமன்றம் கேள்வி?

உயிர்ப்பலி நடந்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நேரலை செய்த ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்.

உபயோகத்தில் இல்லாத ஆழ்துழை கிணறுகளை மூட வேண்டும் என்ற விதிகளை பின்பற்றாதவர்களில் எத்தனை பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நவம்பர் 21ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தை சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், உபயோகப்படுத்தப்படாத கிணறுகள் குறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்து மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு 2015ல் கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்தவும், சிறுவன் சுஜித்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சட்டம் இயற்றியது குறித்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், பல சட்டங்கள் இருந்தாலும் அவை அமல்படுத்தப்படாததால் தான் நீதிமன்றங்கள் பொது நல வழக்குகளால் நிரம்பி வழிவதாகக் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து, தனிமனிதனிடம் சமூக பொறுப்பு இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயிர் பலி நடந்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த சம்பவத்தை தொடர் நேரலை செய்த ஊடகங்கள், அரசின் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை எனவும், ஊடகங்கள் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வேதனை தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதுவரை எத்தனை ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன? விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து நவம்பர் 21 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.