தினகரனுக்கு எதிர்ப்பு – சசிகலாவோடு சமரசம்: எடப்பாடியை சுற்றி வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!

அமமுக பொதுசெயலாளர் தினகரனுக்கு எதிராக அடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவிக்கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவோடு சமரசம் செய்துகொண்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து இதை யாரும் ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அதனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு குழப்பம் நிலவுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக பல நெருக்கடிகளை சந்தித்தாலும், அதில் இருந்து மீண்டு வந்து விட்டது. எடப்பாடி தலைமையிலான அதிமுக, தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் சந்தித்த வெற்றியால் மீண்டும் உத்வேகம் அடைந்துள்ளது.

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ, அதுவே அதிமுக என்ற நிலையில், தினகரன் தொடங்கிய அமமுக, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு முன்பே பல பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும், திமுக, அதிமுக என ஐக்கியம் ஆனதால், தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியை பதிவு செய்வதே சிக்கல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அமமுகவை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்து வரும் எடப்பாடி, அக்கட்சியில் எஞ்சி இருப்பவர்களையும் அதிமுகவோடு இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு விட்டார்.

அதனால், தினகரன் – எடப்பாடி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அதே சமயம், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவோடு எடப்பாடி சமரசம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்ற ரீதியில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கவிதை ஒன்று ஏற்கனவே வெளியானது.

ஆனால், அதைத்தொடர்ந்தும், மீண்டும் சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார். ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என்ற செய்திகள் தற்போது ரெக்கை கட்டி வருகின்றன.

இதுகுறித்து, மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுகையில், ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தோல்வியை சந்தித்து வந்த அதிமுக, வேலூர் மக்களவை இடைத்தேர்தலில் கொஞ்சம் நிமிர்ந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மீண்டும் புத்துயிர் பெற்றது.

இந்நிலையில், அதிமுகவின் வெற்றி தொடரக்கூடாது என்று நினைக்கும் எதிர் தரப்பினர், அதிமுகவின் வலிமையை குறைக்கும் வகையில், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று சில தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த தகவலை அதிமுக தலைமை உறுதிப்படுத்தாதவரை, பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.