ஆழ்துளை கிணறு விபத்துக்களை தவிர்க்க: உச்சநீதி மன்றம் வகுத்த விதிமுறைகள்!

சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழந்து சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

அதே சமயம், உச்சநீதிமன்றம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே வகுத்தளித்துள்ள, ஆழ்குழாய் கிணறுகள் பற்றிய விதிமுறைகளை, பின்பற்றினால் மட்டுமே, இதுபோன்ற உயிரிழப்புகளை நம்மால் தடுக்க முடியும்.

ஆழ்துளை கிணறுகள் அமைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதி முறைகள், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த 2010 ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் பின்வருமாறு

ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே நிலத்தின் உரிமையாளர் அல்லது வளாகத்தின் உரிமையாளர், அந்த பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

 மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட்,  கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்,  நிலத்தடி நீர் துறை,  சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோருக்கு ஆழ் துளைக் கிணறு மற்றும் குழாய்க் கிணறு அமைப்பது குறித்து நில உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறு அமைக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும்,  அரசு நிறுவனங்களும், அரசு-தனியார் கூட்டாக செயல்படும் நிறுவனங்களும் அரசின் பதிவு பெற்றவையாக இருத்தல் அவசியம்.

கட்டுமானம் அமைக்கப்படும் போது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் அறிவிப்புப் பலகை அமைக்க வேண்டும்.

 அந்த அறிவிப்புப் பலகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி, கட்டுமானத்தைக் கட்டும் உரிமையாளர் அல்லது நிலத்தின் உரிமையாளர் பெயர், முழு முகவரி ஆகியவை அந்த பலகையில் இடம்பெற வேண்டும்.

கட்டுமானத்தின்போது, ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி வேலி அமைத்தல் அல்லது தகுந்த தடுப்புகளை உரிமையாளர் கண்டிப்பாக அமைக்க வேண்டும்

 ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தரை மட்டத்திலிருந்து 0.30 மீட்டர் மற்றும் தரை மட்டத்துக்குக் கீழ் 0.30 மீட்டரில் 0.50×0.50×0.60 மீட்டர் அளவில் அளவில் சிமென்ட் அல்லது கான்கிரீட் தளத்தை அமைக்க வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு அமைத்தபின், அதில் செல்லும் பிளாஸ்டிக் குழாய் அல்லது இரும்பு குழாயை இரும்பு பிளேட் கொண்டோ அல்லது மூடிக் கொண்டு மூடி பூட்டிவிட வேண்டும்

ஒருவேளை ஆழ்துளைக் கிணற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் கூட அந்த நேரத்தில் அந்த ஆழ்துளைக் குழாயின் மூடியைத் திறந்தவாறு வைத்திருக்கக் கூடாது. ஆழ்துளைக் கிணற்றில் பழுது நீக்கப்பட்டபின் அதைச் சுற்றியுள்ள மண், கற்கள் கொண்டு சுற்றி அடைத்தால் மட்டுமே பணிகள் முடிந்ததாக அர்த்தம் கொள்ளப்படும்.

தண்ணீர் இல்லாமல் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் தரைமட்டத்திலிருந்து களிமண், கூழாங்கற்கள், மணல், கற்கள் கொண்டு நிரப்பி தரைமட்டத்துக்கு மூட வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு தோண்டிமுடிக்கப்பட்டபின், அந்த குறிப்பிட்ட இடம், அதாவது ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட இடம் கிணறு தோண்டும்போது எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மாற்றி அமைத்து, சரி செய்யப்படவேண்டும்.

உச்ச நீதிமன்றம் வழிகாட்டிய நெறிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை அறிய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், குழாய் கிணறுகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட அளவில், மண்டல அளவில், கிராம அளவில் பயன்பாட்டில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் கண்டறிய வேண்டும்.

குழாய்க் கிணறுகள் திறந்த நிலையில் எத்தனை இருக்கின்றன, கைவிடப்பட்ட குழாய்க் கிணறுகள் எத்தனை, அவைகளில் எத்தனை தரைமட்டத்துக்கு மூடப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மாவட்ட அளவில் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

கிராமங்களில் இந்த பணிகளை கிராமப்பஞ்சாயத்து தலைவர் அல்லது வேளாண் துறையின் அதிகாரி யாரேனும் செய்ய வேண்டும். நகர்ப்புறங்கள் என்றால் இளநிலைப் பொறியாளர் அல்லது நிலத்தடிநீர் துறை, பொதுச்சுகாதாரம், நகராட்சி ஆகியவற்றிலிருந்து நிர்வாக அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும்.

எந்த நிலையிலாவது ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு கைவிடப்பட்டால், நிலத்தடிநீர் துறை, பொதுச்சுகாதாரம், நகராட்சி ஆகியவற்றிலிருந்து நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ஆழ்துளைக் கிணறு முறைப்படி தரைமட்டத்துக்கு மூடப்பட்டுவிட்டது என்று சான்று பெறுதல் வேண்டும்.

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது மேற்குறிப்பிட்ட துறையின் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அனைத்து தகவல்களையும் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் வகுத்த நெறிமுறைகளை, மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் முறையாக பின்பற்றினால், ஆழ்குழாய் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கண்டிப்பாக நம்மால் தடுக்க முடியும்.