80 மணி நேர மீட்பு பணி – பிரார்த்தனைகள் பொய்த்தன: சிறுவன் சுஜீத் உடல் மீட்பு!

80 மணி நேர இடைவிடாத மீட்புப்பணி, கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனை என எதுவும் பலனின்றி, ஆழ்துளை கிணற்றின் பள்ளத்தில் விழுந்த சிறுவன் சுஜீத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும், சுஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனைகளும் பொய்த்து போயின.

இதயத்தை வருடும் சிறுவன் சுஜீத்தின் இழப்பு அனைவரையும் கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில்,  இரண்டு வயது சிறுவனான சிறுவன் சுஜித் 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அதைத்தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி, சுமார் 80  மணி நேரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

பின்னர், 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு  பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், அங்கிருந்து  கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதுர் கல்லறை தோட்டதிற்கு கொண்டு செல்லப்பட்டது.  சுஜித்தின் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றது. கல்லறை தோட்டத்தில், வைக்கப்பட்ட சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு, சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.