புதுச்சேரியில் வலுவான சக்தியாக உருவெடுக்கும் நாராயணசாமி: டம்மியாகும் நமசிவாயம் – ரங்கசாமி!

புதுச்சேரி என்பது தமிழகத்தில் உள்ள  39 மக்களவை தொகுதிகளில், ஒரு தொகுதியின் பரப்பளவும் வாக்காளர்களும் கொண்டுள்ள ஒரு யூனியன் பிரதேசம்.

இந்த சிறிய மாநிலத்தில், முதல்வர் மாற்றங்களும், ஆட்சி கவிழ்ப்புகளும், கட்சி மாறல்களும் அடிக்கடி நிகழும்.. அதனால், தேர்தல்களும் அடிக்கடி நடக்கும்.

புதுச்சேரியில் அன்றிலிருந்து இன்று வரை வலுவான கட்சியாக திகழ்வது காங்கிரஸ் மட்டுமே. அடுத்த நிலையில்தான் திமுக, அதிமுக.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமி.

அவர் இரண்டாவது முறை முதல்வராக இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியின் உள் அரசியல் விவகாரங்களால், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது.

அடுத்த தேர்தல் வரும் வரை அமைதியாக இருந்த ரங்கசாமி, தேர்தல் நடக்க இரண்டு மாதங்களுக்கு முன்னதாக என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி, அந்த தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

தற்போதைய முதல்வர் நாராயணசாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். அம்மாநிலத்தில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்பதால், ரங்கசாமியின் ஆட்சிக்கு இடையூறாகவே பல நடவடிக்கைகள் இருந்தன.

அதன் பின்னர்  கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணியுடன், அப்போதைய காங்கிரஸ் தலைவரும், ரங்கசாமியின் உறவினருமான நமசிவாயம் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

நமசிவாயமே முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லியில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, திடீரென முதல்வர் ஆனார் நாராயணசாமி.

அன்று முதல் இன்று வரை, நமசிவாயத்திற்கும் – நாராயணசாமிக்கும் இடையேயான பனிப்போர் உள்ளுக்குள் புகைந்து கொண்டே இருக்கிறது.

நமசிவாயம் தலையெடுத்தால், நாராயணசாமியின் அரசியல் செல்வாக்கு அஸ்தமனமாகிவிடும். அதனால், நமசிவாயம் தொடர்ந்து டம்மியாக்கப்பட்டு வருகிறார்.

மறுபக்கம், தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் புதுவை மக்களுக்கான கட்சி, புதுவை மக்களுக்காக தலைவன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கி வெற்றி வாகை சூடிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி.

ஆனாலும், கடந்த சட்டமன்ற தேர்தலில், தோற்று ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அவருடைய செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது.

தமது கட்சியை திறம்பட நிர்வகிக்காமலும், எதிர்கட்சி பாத்திரத்தை சரியாக கையாளாத காரணத்தாலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் ரங்கசாமி.

கட்சி ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் பலருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையே வழங்கவில்லை, தொகுதி நிர்வாகிகள் நியமிக்கவில்லை. தினசரி அரசியல் செய்யாமல் தேர்தலின்போது மட்டுமே மக்களை சந்திக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகி கொஞ்சம், கொஞ்சமாக தமது அரசியல் வலிமையை இழந்து வருகிறார் ரங்கசாமி.

இது, முதல்வராக இருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஏனெனில், தற்போதைய புதுவை அரசியலை  பொறுத்தவரை, அவருக்கு மூன்று முக்கிய எதிரிகள் உள்ளனர்.

ஒருவர் கடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு முகமாகவும் முகவரியாகவும்  இருந்து, தேர்தலில் வெற்றி தேடித்தந்து, வேறு வழியில்லாமல் முதல்வர் பதவியை இவரிடம் தாரை வார்த்த நமசிவாயம். இவரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்தே எடுபடாமல் பார்த்துக்கொள்கிறார் நாராயணசாமி.

இரண்டாவது வலிமையான எதிரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி. நடைமுறைக்கு ஒவ்வாத, இவரது கட்சி நிர்வாகத்தால், இவரும், இவரது கட்சியும் தாமாகவே பலமிழந்து போகும் நிலையில் உள்ளது.

மூன்றாவது எதிரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. இவர் ஆளுநராக இருக்கும் வரை இவரிடம் எதுவும் செய்ய முடியாது, ஆனாலும், இவர் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதும் இல்லை, அதனால், சில காலம் பொறுத்தால் போதும்.

நாராயணசாமிக்கு இப்போதுள்ள கவலை எல்லாம், உறவினர்களான ரங்கசாமியும், நமசிவாயமும் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது. அப்படியே ஒன்று சேர்ந்தாலும், அவர்கள் கிரண்பேடியுடன் கலந்து பேசக்கூடாது.

இதே நிலையை மெயின்டைன் பண்ணினால் போதும். அடுத்து புதுச்சேரி அரசியல் களத்தில், புதிதாக யாரும் தமக்கு போட்டியாக வர வாய்ப்பு  இல்லை என்பதை துல்லியமாக கணக்குப் போட்டு, காய்நகர்த்தி வருகிறார் நாராயணசாமி.

இந்த கணக்கில் வெற்றி பெற்று, புதுச்சேரியின் ஈடு இணையற்ற முதல்வராக வலம் வரவேண்டும் என்பதே முதல்வர் நாராயணசாமியின் வியூகம். அந்த வியூகம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி அடைந்து வருகிறது.

அதனால், புதுச்சேரியின் அசைக்க முடியாத சக்தியாக வலிமையுடன் உருவெடுத்து வருகிறார் முதல்வர் நாராயணசாமி.