பஞ்சமி விவகாரத்தில் விடாமல் துரத்தும் ராமதாஸ்: முற்றுப்புள்ளி வைப்பாரா ஸ்டாலின்?

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த பாராட்டு பதிவும், அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த பதிலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் இன்று அது குறித்து பேச வைத்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்த பஞ்சமி சர்ச்சை, பாஜக, மதிமுக, விசிக என அனைத்து கட்சிகளையும் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறவும் வைத்துள்ளது.

தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்துவிட்டு, அதற்கு தமது டுவிட்டர் பதிவு மூலம் பாராட்டு தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதற்கு பதில் தெரிவித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்தால் பாராட்டுக்கள் என்று கூறி இருந்தார்.

இது, ஸ்டாலினுக்கும் – ராமதாசுக்கு இடையே அறிக்கை போராக உருவெடுத்தது. அதனால், முரசொலி சம்பந்தப்பட்ட நில ஆவணங்களை தமது பதிலுடன் இணைத்து வெளியிட்டார் ஸ்டாலின்.

அதற்கும் பதிலளித்த ராமதாஸ், முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று கேட்டார்.

மூல ஆவணங்களை நான் வெளியிட தயார். அப்படி வெளியிட்டால், மருத்துவர் ராமதாசும், அவரது மகனும் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்ற, எனது அறைகூவலை ஏற்க வேண்டும் என்று ஸ்டாலின் சவால் விடுத்தார்.

இதனிடையே, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை மதிமுக பொது செயலாளர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் கூறி இருந்தார்.

ஆனால், இதற்கு பதில் அளித்த வைகோ, நான் அந்த சந்தர்ப்பத்தில் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் அது தவறு என்பதை பின்னால் உணர்ந்தேன் என்று திடீரென பல்டி அடித்தார்.

இந்நிலையில், பாஜக மாநில செயலாளர் சீனுவாசன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார்.

இதற்கு, தமிழக தலைமை செயலாளர் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், அறிவாலயமாக இருந்தாலும் சிறுதாவூர் பங்களாவாக இருந்தாலும் பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்’ என்று தமிழக முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

மேலும், பஞ்சமி விவகாரம் குறித்து, இதற்கு முன் ராமதாஸ் ஏதாவது குரல் கொடுத்து இருக்கிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையடுத்து, இன்று இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், செங்கல்பட்டை அடுத்த காரணை கிராமத்தில் 1994 ம் ஆண்டு நடந்த பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் தமது பங்களிப்பு என்ன என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

அத்துடன், இன்றைக்கு கேள்வி கேட்கும் தலைவர்கள் அப்போது களத்தில் இல்லை என்றும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பஞ்சமி விவகாரத்தில் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

எனவே, முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்களை வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.