மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி: ஆளுனரை தனித்தனியே சந்தித்த பாஜக – சிவசேனா! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. பாஜகவும் சிவசேனாவும் இணைந்து தேர்தலை சந்தித்தாலும், முதல்வர் பதவிக்கு இரு கட்சிகளுமே குறி வைத்துள்ளதால், இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், சிவசேனாவுக்கு 56 உறுப்பினர்களும் உள்ளனர்.

கூட்டணி ஆட்சி அமைக்க இந்த பெரும்பான்மை போதும் என்ற நிலையில், முதல்வர் பொறுப்பு தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது.

ஆனால், முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக மறுக்கிறது. இதையடுத்து, முதல்வர் பட்நாவிஸ் பாஜக சார்பிலும், சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேவும் இன்று தனித்தனியே அம்மாநில ஆளுநர் பகத்சிங்கை சந்தித்து பேசியுள்ளனர்.

இது தீபாவளி பண்டிகையை ஒட்டிய வழக்கமான சந்திப்புதான் என்று வெளியில் சொன்னாலும், உணமியில் இரு கட்சிகளுமே முதல்வர் பதவியை கைப்பற்ற துடிக்கின்றன என்பதே உண்மை என்று கூறப்படுகிறது.

மறுபக்கம் சுயேச்சை எம்.எல்.ஏ க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும், இவ்விரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. பாஜகவிருக்கு இதுவரை மூன்று சுயேச்சை உறுப்பினர்களும், சிவசேனாவுக்கு இரண்டு சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் வகையில், 44 எம்.எல்.ஏ க்களை வைத்துள்ள காங்கிரஸ் மற்றும்  54 எம்.எல்.ஏ க்களை கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், மகராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா, தமது அதிகாரப்போர்வ இதழான சாம்னாவில் மத்திய அரசுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளது.

அதில் “நாட்டின் பொருளாதார சூழல் சரிவை நோக்கிச் செல்கிறது.

அதிலும் தீபாவளி நேரத்தில் சந்தைகள் மிகவும் மந்தமாக இருக்கும்போது மத்திய அரசு  மவுனம் காப்பது ஏன்?

திட்டமிடப்படாமல் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி தவறாக அமல்படுத்தப்பட்டதே இப்போதுள்ள பொருளாதார சரிவுக்கு காரணம்”  என்று கூறப்பட்டுள்ளது.

இதுவே, பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் உள்ள இடைவெளியை தெளிவு படுத்தி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.