பாஜகவின் அதீத நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் அளித்த தேர்தல் முடிவுகள்!

மகராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ஹரியானாவில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன்தான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டிய நிர்பந்தத்தில் பாஜக இருக்கிறது.

இதுதவிர, இரு மாநில சட்டமன்ற தேர்தலுடன், நாடு முழுவதும் 11  மாநிலங்களில் நடைபெற்ற 51 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் 2  நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவின் அதீத நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த கூடுதல் வெற்றி, அந்த கட்சிக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தது, அதனால் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாஜக எண்ணியது.

ஆனால், இடைத்தேர்தல் முடிவுகள், பாஜக எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. மாறாக, காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகளின் வலிமை கூடியுள்ளதை தெளிவுபடுத்தி உள்ளன.

மராட்டிய மாநிலம் சதாரா மக்களவை தொகுதியில் சரத்பவாரின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது பாஜகவின் நடவடிக்கை தோல்வி அடைந்ததை உறுதிப்படுத்தி உள்ளது.

பாஜகவின் முன்மாதிரி மாநிலமான குஜராத்தில், ஆறு தொகுதிகளுக்கு  நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், மூன்று இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இந்த மூன்றும் பாஜகவுக்கு இழப்பு.

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் பாரம்பரிய தொகுதியாகவும் கோட்டையாகவும் கருதப்பட்ட ஜாபு தொகுதியை காங்கிரசிடம் கோட்டை விட்டுள்ளது. ராஜஸ்தானிலும், பாஜகவுக்கு சொந்தமான ஒரு தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

மொத்தமாக 51 சட்டமன்றங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 30 தொகுதிகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 12 தொகுதிகளையும், எஞ்சிய தொகுதிகளை பிராந்திய கட்சிகளும் கைப்பற்றி உள்ளன.

குறிப்பாக இந்த இடைத்தேர்தல்களில், பாஜக பல தொகுதிகளை இழந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் கூடுதலாக வென்றுள்ளன.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள், பாஜகவின் அதீத நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு ஏற்ப மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் என்பதையும் இது உறுதிப்படுத்தி உள்ளது.