ரஜினியின் நம்பிக்கையை தகர்த்த இடைத்தேர்தல் முடிவுகள்!  

தமிழக அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம் போன்ற பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் ரஜினியை, அண்மையில் வெளியான இடைத்தேர்தல் முடிவுகள் ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது என்று கூறுகின்றனர்.

ஜெயலலிதா, கலைஞரின் மறைவு, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று நேரடியாகவே கருத்து தெரிவித்த ரஜினி, விரைவில் அரசிலுக்கு வரும் தமது விருப்பத்தையும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோடிட்டு காட்டினார்.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சில முக்கிய புள்ளிகளும், அவருடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆலோசனை நடத்தி வந்தனர். சிலர், அவர் கட்சி ஆரம்பித்தால், இணைவதற்கும் தயாராக இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியானது.

ஆனால், வழக்கம்போல அதற்குப்பினர் ரஜினி எதையும் பேசவில்லை. ஆனால், அவரது ரசிகர்கள் கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

ரஜினிக்கு நெருக்கமான தமிழருவி மணியன் கூட, சில நாட்களுக்கு முன்பு, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கூறி இருந்தார்.

அதே சமயம், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதை மிகவும் ஆவலோடு ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ரஜினியை பொறுத்தவரை, ஏதாவது ஒரு கட்சி முழுமையாக பலவீனப்படும், அது தமக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

மேலும், கடந்த மக்களவை தேர்தலில், திமுக அமோக இடங்களில் வெற்றி பெற்றதால், அதிமுகவுக்கு இடைத்தேர்தல் பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்றும் அவர் கருதினார்.

ஆனால், இந்த இரண்டுமே பொய்த்துப் போய்விட்டது. திமுக இரு தொகுதிகளிலும் தோற்றாலும், அதன் வாக்கு வங்கியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

அதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக, இந்த இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், காங்கிரஸ் – திமுக வசம் இருந்த இவ்விரண்டு தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.

ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இருவரும் இல்லாத நிலையிலும், திமுக அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தி உள்ளன.

இந்த நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால், எந்த கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும்? என்ற கேள்விக்கு இன்னும் விடை காண முடியவில்லை.

தமது அரசியல் பிரவேசத்தால், உண்மையில், இவ்விரு கட்சிகளின் வாக்கு வங்கியில் பாதிப்பு வருமா? என்ற கேள்வியும், சந்தேகமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் முடிவு துரிதப்படுத்தப்படுமா? அல்லது வழக்கம் போல் தள்ளிப்போகுமா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.