மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: கலைஞரை நினைவுபடுத்திய சரத்பவார்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது 92 வயது இருக்கும், அந்த வயதிலும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று அயராது உழைத்தார்.

வயது முதிர்ந்தும், அவரால் பேச முடிந்தவரை, எழுத்திலும், பேச்சிலும் அவரது அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அப்படிப்பட்ட கலைஞரை நினைவு கூறும் வகையில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , தமது தள்ளாத வயதிலும், கொட்டும் மழையிலும், யாரையும் குடை பிடிக்க விடாமல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் உருக்கமாக பேசி மக்களை கரைய வைத்துள்ளார்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் விலகி வேறு கட்சிக்கு சென்றாலும், அவருடைய மன உறுதியும், அசைக்க முடியாத நம்பிக்கையும், இந்த தேர்தலில் சரத்பவாருக்கு ஓரளவு வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.

இந்த வெற்றி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து, அம்மாநிலத்தை சேர்ந்த சர்வதேச முன்னணி தொலைகாட்சி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் கூறும்போது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போல, தள்ளாத வயதிலும் சரத்பவார் கட்சிக்காக உழைக்கிறார் என்று கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும், சதாரா மக்களவை தொகுதியில், கடந்த 2009 ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் முதல் 2019 ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியே வென்று வந்துள்ளது.

இந்த தொகுதியில் பவாருக்கு நெருக்கமான, வீர சிவாஜி வம்சத்தை சேர்ந்த உதயன்ராஜே போன்ஸ்லே என்பவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் திடீரென, அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதாவில் சேர்ந்து விட்டார். அதனால், சட்டமன்ற தேர்தலோடு, இந்த மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

தன்னை முதுகில் குத்தியதாக பவார் நினைத்த போன்ஸ்லே இதே தொகுதியில், பாஜக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதித்து தமது கட்சியின் சார்பில் ஸ்ரீநிவாஸ் பாட்டீலை நிறுத்தினார்.

அந்த தொகுதியின் பிரச்சாரத்தில் பவார் ஈடுபட்டபோது, பிடித்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. மழையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், யாரையும் குடை பிடிக்க விடாமல், பவார் தொடர்ந்து உருக்கமாக பேசினார்.

விளைவு, சுமார் 87 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை ஸ்ரீநிவாஸ் பாட்டில் தோற்கடித்தார். அத்துடன், சட்டமன்றதேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் கட்சியும் புத்துயிர் பெற்றுள்ளது.

மராட்டிய முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை பலமுறை வகித்துள்ள சரத்பவாருக்கு மாநில அரசியல், மத்திய அரசியல் என எதுவாக இருந்தாலும் எப்போதும் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அது இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பிடித்து இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு, எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதை காரணமாக வைத்து, சிவசேனா கட்சி, முதல்வர், உள்துறை அமைச்சர் பதவி உள்ளிட்ட ஐம்பது சதவிகிதத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவை நிர்பந்தித்து வருகிறது.

இந்த நிபந்தனையை பாஜக ஏற்க மறுத்தால், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் சிவசேனா ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொண்டுள்ளது.

இந்திரா காந்தி காலத்திலேயே அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சரத்பவார், சிவசேனாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் மூலம், பாஜகவை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற முடியும் என்று கணக்கு போட்டே காய் நகர்த்தி வருகிறார்.

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், வெவ்வேறு பாதையில் பயணித்தாலும், இரு கட்சிகளும், தேர்தலுக்கு முன்னும் பின்னும், பெரிய அளவில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளவில்லை. இது இரு கட்சிகளுமே நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் நட்பாகவே உள்ளது.

எனவே, மராட்டிய மாநிலத்தில், பிப்டி பிப்டி என்ற விகிதத்தில் சிவசேனாவின் நிபந்தனையை பாஜக ஏற்குமா? அல்லது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்குமா? என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.