கைதி – திரை விமர்சனம்: விறுவிறுப்பு நிறைந்த படம்!

ஒரு ஆயுள்தண்டனை கைதியான கார்த்தியை பயன்படுத்தி, போதைப்பொருள் கும்பலிடம் இருந்து காவல் துறை அதிகாரிகளை மீட்பதும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மீண்டும் அவர்கள் கைப்பற்றாமல்  பாதுகாப்பதுமே படத்தின் அடிப்படை கதை.

தொடக்கம் முதல் முடிவு வரை படத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே இல்லை. அவரவர்களும், அவரவர் பாத்திரத்தை அருமையாக செய்துள்ளனர்.

ஒரு போதைப் பொருள் கும்பலிடம் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஒரு பழைய காவல் நிலையத்தின் கீழ் பாதுகாப்பாக வைக்கிறார் காவல்துறை அதிகாரியாக வரும் நரேன். அதை மீண்டும் கைப்பற்ற முனைகிறது போதைப்பொருள் கும்பல்.

மறுபக்கம் தங்கள் கூட்டத்தில் ஊடுருவியுள்ள காவல்துறை அதிகாரிகளைக் கொல்ல நினைக்கிறது போதைப்பொருள் கும்பல். மயக்க நிலையில் இருக்கும் அதிகாரிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நினைக்கிறார் நரேன்.

இதற்கு, ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து, விடுதலை ஆகி வரும், கார்த்தியை பயன்படுத்துகிறார் காவல்துறை அதிகாரி நரேன். இதில் பல ஆபத்துக்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.

இதைத்தாண்டி, வில்லன்களின் எண்ணம் நிறைவேறுகிறதா, போலீஸ் அதிகாரியின் திட்டம் வெற்றி பெறுகிறதா? என்பதை சொல்வதே படத்தின் கதை.

கார்த்திக்குக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படம், ஆரம்பம் முதல் இறுதி வரை கார்த்தி இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

லாரி உரிய இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதில் உள்ள சவால்களும் அதை முறியடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் மிகுந்த விறுவிறுப்பை தருகின்றன.

வில்லன்களின் காவல் நிலைய முற்றுகையை முறியடிக்க ஜார்ஜ் மரியான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. இந்த படம் நரேன் மற்றும் ஜார்ஜ் மரியானுக்கு மீண்டும் சில நல்ல வாய்ப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

கார்த்தியின் ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும், தனி ஆளாக நின்று இருபது முப்பது பேரை அடித்து நொறுக்கும் விதம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை.

எனினும் ஆக்ஷன் காட்சிகளை வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாக  அமைத்திருப்பதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கிறது படம். விறுவிறுப்பு – ஆக்ஷன்- பொழுதுபோக்கு ஆகியவற்றை விரும்புபவர்களை கைதி அதிகம் கவரும்.