பிகில் – திரை விமர்சனம்: எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்காத பிகில்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் பிகில். மைக்கல் என்ற ரோலில் வரும் விஜய் ஒரு லோக்கல் தாதா. அமைச்சரையே தெறிக்கவிடும் அளவுக்கு பெரிய ரவுடி.

அவருடைய நண்பரான கதிர் ஒரு கால்பந்து பயிற்சியாளர். கதிரும், மைக்கலும் சேந்து சென்று கொண்டிருக்கும்போது, நிகழும் ஒரு தாக்குதலில்  கதிர் படுகாயமடைகிறார்.

கதிர் பயிற்சியாளராக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு கால்பந்தாட்ட அணிக்கு மைக்கல் கோச்சாகிறார். ஒரு ரவுடி எப்படி கோச்சாக முடியும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு பிளாஷ் பேக்.

அதற்கு பின்னர், மைக்கேலை கோச்சாக ஏற்க மறுக்கும் அணி வீரர்களுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தி, அதன் பின்னர் போட்டியிலும் வெற்றி பெறுகிறார். இடை இடையே வில்லன்களையும் பந்தாடுகிறார்.

இதற்கு முன் வந்த விஜய் படங்களுக்கு இல்லாத எதிர்பார்ப்பு, இந்த படத்திற்கு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.

விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட  வெண்ணிலா கபடிக் குழு, இறுதிச்சுற்று, கனா போன்ற படங்கள் ஏற்படுத்திய விறுவிறுப்பை இந்த படம் ஏற்படுத்தவில்லை என்று பல விமர்சகர்கள் கூறுகின்றனர்.

படம் அதிக நேரம் ஓடுவது ஒரு மைனஸ். முதல் பாதி வெறும் சண்டையும் பாட்டும், இரண்டாவது பாதி, விறுவிறுப்பு இல்லாத விளையாட்டு என படம் செல்கிறது.

படத்தில் அப்பா மகன் என இரு வேடத்தில் வரும் விஜய், பல இடங்களில் சரத்குமார் இரு வேடங்களில் வரும் காட்சிகளை நினைவு படுத்துகிறார். இப்படி பல இடங்களில் படம் முழுவதும், ரஜினி, கமல் நடித்த பல படங்களின் காட்சிகளே நினைவுக்கு வருகின்றன.

நயன்தாரா வெறும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது போல உள்ளது. விவேக், யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், சிரிப்பு என்பது பெரிதாக வரவில்லை.

வில்லன்களாக வரும் ஷர்மா, டேனியல் பாலாஜி போன்றவர்களிடம் மோதும் காட்சிகள் எல்லாம், பழைய விஜயகாந்த் படங்களை நினைவு படுத்துகின்றன. ரகுமானின் இசையின் சிங்க பெண்ணே பாடல் ஒ.கே.

மொத்தத்தில் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதற்கேற்ற தீனி போடாமல் விட்டு விட்டது பிகில் என்றே சொல்லப்படுகிறது. எனினும் விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.