விக்கிரவாண்டியில் திமுக தோல்விக்கு பொன்முடி – எ.வ. வேலுக்கு முக்கிய பங்கு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக 44  ஆயிரம் வாக்கு வித்தியாசத்திற்கு மேல் தோற்றதற்கு பொன்முடி மற்றும் எ.வ.வேலுக்கு முக்கிய பங்கு உள்ளதாக திமுகவினரே கூறுகின்றனர்.

வேட்பாளர் தேர்வில் பொன்முடிக்கு விசுவாசமானவர் என்ற முறையில், தொகுதிக்கு வெளியில் இருந்து புகழேந்தியை கொண்டு வந்தது.

அத்துடன் வெளியூரில் இருந்து பிரச்சாரத்திற்காக வந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் எரிந்து விழுந்தது. பணத்தை மட்டும் கொடுங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று, கராராக பேசியது.

திமுகவில் இணைய வந்த வன்னியர்களை இணையவிடாமல் தடுத்து நிறுத்தியது. ஏற்கனவே, வன்னியர் மட்டுமன்றி மற்ற சமூகத்தினரின் எதிப்பை கூடுதலாக பெற்றிருந்தது.

முன்னாள் மாவட்ட செயலாளர் முகையூர் சம்பத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தாமல் விட்டது என்று பொன்முடி செய்த வேலைகளே, இன்று விக்கிரவாண்டியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வி அடைய காரணமாக இருந்தது என அங்குள்ள திமுகவினர் பலர் பொன்முடி மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து, தேர்தல் செலவுகளை கவனிக்க வந்த எ.வ.வேலுக்கு, முழுமையாக நிதி சென்று சேராமல் இருந்தது ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

அனைத்துக்கும் மேலாக, திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர்களுக்கு செய்த சலுகைகள், இனி செய்யப்போகும் சலுகைகள் என பட்டியல் போட்டு அறிக்கை வெளியிடும் ஐடியாவை ஸ்டாலினுக்கு கொடுத்தது எ.வ.வேலுதான் என்று மறு பக்கம் பொன்முடி, அவர் மீது குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார்.

விக்கிரவாண்டியில் வன்னியர் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், மற்ற சமூகங்களும் கணிசமான அளவில் இருக்கத்தானே செய்கின்றனர். இந்த நிலையில், வன்னியர் பிரச்சினை குறித்து மட்டுமே, ஸ்டாலின் வெளியிட்ட  அறிக்கையே, வன்னியர்களை திமுகவுக்கு எதிராக திருபிவிட்டுள்ளது. மற்ற சாதியினருக்கும் இது வெறுப்பை ஏறபடுத்தியது. இதுவும், விக்கிரவாண்டியில் திமுக படுதோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

அத்துடன், ஸ்டாலின் மற்றும் உதயநிதி வரும்போது மட்டுமே கூட்டத்தை காட்டினால் போதும் என்ற மனநிலையில் இருந்த பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அதற்கு பின்னர், விறுவிறுப்பாக களத்தில் இறங்கி வேலை செய்யாமல் சுணக்கம் காட்டியுள்ளனர்.

திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான விசிக தலைவர் ஒருநாள் மட்டுமே வந்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, தேர்தல் செலவுக்கான நிதி சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்ந்ததன் காரணமாகவே, திமுக இந்த அளவுக்கு ஒரு மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.