மருத்துவர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் அதிமுக!

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து அக்கட்சி இன்னும் மீளவில்லை. அதேபோல், அதிமுகவினர் இன்ப அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை.

விக்கிரவாண்டி தொகுதியில் 44 ஆயிரத்து 924 வாக்ககுகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது, அந்தக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இதற்காக கடுமையாக உழைத்த அதிமுக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் எடப்பாடி, கூட்டணி கட்சி தலைவரான பாமக நிறுவனர் ராமதாசுக்கு நன்றி தெரிவிக்க, அமைச்சர்கள் பட்டாளத்தையே அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்.

அதனால், தைலாபுரம் தோட்டத்திற்கு வரும் அமைச்சர்களை வரவேற்று விருந்து வைப்பதற்காக பாமக தயாராக இருக்கிறது.

அதன் முதல்படியாக, விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை, இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து சென்ற அமைச்சர் சண்முகம், மருத்துவர் ராமதாசிடம் வாழ்த்து பெற வைத்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியானவுடன், அதிமுகவினருக்கு தைலாபுரத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியை விட, அடுத்து வரும் விருந்து நிகழ்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்று பாமக தலைமை முடிவு செய்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு, பாமகவின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்ந்த, முதல்வர் எடப்பாடி, நேற்றே பாமக நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.

நன்றி தெரிவித்த முதல்வருக்கு, மருத்துவர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அப்போது, இதே உத்வேகத்துடன், அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டால், மிகப்பெரிய வெற்றியை அடையலாம் என்று முதல்வர் – ராமதாஸ் ஆகிய இருவருமே மனம் விட்டு பேசி உள்ளனர்.