நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சியை முந்திய பனங்காட்டுப் படை: அதிர்ச்சியில் சீமான்!

நாங்குநேரி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு 95 ஆயிரத்து 377 வாக்குகளும், ரூபி மனோகரனுக்கு 61 ஆயிரத்து 932 வாக்குகளும் கிடைத்தன.

இந்த தேர்தலில், கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு வருவார்  என்று  எதிர்பார்க்கப்பட்ட, சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் 3 ஆயிரத்து 494 வாக்குகளை பெற்றார்.

அதே சமயம் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார், சீமான் கட்சியைவிட 929 வாக்குகளை கூடுதலாகப் பெற்றுள்ளார். ஹரி நாடார் மொத்தமாக 4 ஆயிரத்து 243 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹரி நாடார், நாங்கள் கட்சி ஆரம்பித்து ஆறுமாதங்களுக்குள், பண பலமும், அதிகார பலமும் கொண்ட கட்சிகள் மோதும், இடைத்தேர்தலில், இந்த அளவுக்கு மக்கள் வாக்களித்து இருப்பதை பெருமையாக நினைக்கிறோம் என்று கூறினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்ற நாம் தமிழர்கட்சி, இந்த இடைத்தேர்தலில், பனங்காட்டு படை கட்சியை விட குறைவாக வாக்குகள் பெற்றிருப்பது, சீமானுக்கு  அதிர்ச்சியை அளித்துள்ளது.