நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கோட்டைவிட காரணம் என்ன?

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிட்டாலும், திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவருமே ஆளும் கட்சிக்கு ஈடுகொடுத்து உழைத்துள்ளனர்.எனினும், காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதியை அதிமுக கைப்பற்றி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் அழகிரி, வசந்தகுமார் போன்றவர்கள் போதிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் பணமும் பெரிதாக செலவு செய்யவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் அதிக அளவில் செலவாகி விட்டது என்று ஒதுங்கிக் கொண்டனர்.

இது, அங்கு முகாமிட்டிருந்த அதிமுக அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மிகவும் வசதியாக ஆகிவிட்டது என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், கனிமொழியை பிரச்சாரத்திற்கு அழைக்காததும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கனிமொழி நான்குநேரிக்கு வந்திருந்தால், காங்கிரசுக்கு ஓரளவு வாக்குகள் கூடுதலாக கிடைத்திருக்கும்.

மதிமுக தலைவர் வைகோ, ஒரே ஒருநாள் பெயருக்கு வந்து சென்றது,. விசிக தலைவர் பிரச்சாரத்திற்கு வராதது போன்றவையும் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அந்தந்த சமூக தலைவர்கள், அந்தந்த சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்வது போல, அதிமுக தரப்பில் பார்த்துக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஸ்டாலினும், உதயநிதியும் மட்டுமே முக்கிய பிரச்சார நாயகர்களாக வந்து சென்றனர். இதுவும், நாங்குநேரி தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறுகின்றனர்.

இதுபோன்ற பல காரணங்களால்தான், நாங்குநேரி தொகுதியைக் காங்கிரஸ் இழக்க நேர்ந்தது என்று கூறுகின்றனர்.