முரசொலி-பஞ்சமி விவகாரத்தில் ஸ்டாலினை நெருக்கும் பாஜக: பின்வாங்கும் வைகோ!

முரசொலி அலுவலகம் பஞ்சமி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பற்ற வைத்த நெருப்பை, பாஜக ஊதி ஊதி இன்னும் புகைய வைத்துக் கொண்டு இருக்கிறது.

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்படவில்லை என்றால், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டியதுதானே, என்று காட்டமாகவே கூறி இருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார், முரசொலி அலுவலகம் பஞ்சமி இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை, மதிமுக பொது செயலாளர் வைகோ ஏற்கனவே கூறிவிட்டாரே என்றார்.

இதற்கிடையே, பாஜக மாநில செயலாளர் சீனுவாசன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

அதையடுத்து, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் உண்மை நிலை என்ன? அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைள் என்ன? என்பதை ஏழு நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆனால், ராமதாஸ் என்னும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம், அதற்கு பதில், முன்னாள்முதல்வர் ஜெயலலிதா, பையனூரில் பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டியுள்ள அரண்மனை குறித்து விசாரித்தால் பலன் கிடைக்கும் என்று சீனுவாசனுக்கு அறிக்கை மூலம் ஸ்டாலின் பதில் கூறி இருந்தார்.

இந்நிலையில், நீங்கள் என்னை விமர்சித்தாலும் பரவாயில்லை. ஆனால், நான் பஞ்சமி நிலம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு உரிய பதிலை சொல்லுங்கள் என்று, சீனுவாசன் ஸ்டாலினை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று நான் அப்போது சொல்லி இருக்கலாம். ஆனால் பின்னர் அது தவறு என்று உணர்ந்தேன் என இந்த பிரச்சினை குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது உண்மையே என்று தடா பெரியசாமி கூறி உள்ளார்.

அசுரன் படத்தை பார்த்து அதற்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, பஞ்சமி நிலத்தை மையப்படுத்தி விமர்சனத்தை முன்வைத்தார் ராமதாஸ்.

அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், பாஜக, தடா பெரியசாமி என பலரும் தொடர்ந்து பேசி வருவது, இந்த  பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கி வருகிறது.