சிவசேனா – காங்கிரஸ் ரகசிய உடன்பாடு: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தடுமாறும் பாஜக!

மக்களவை தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் மக்களின் மனநிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கு, மகராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகளே சான்றாகும்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோதும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதிய பெரும்பான்மை பெறவில்லை.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், ஆளும் பாஜக – சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

மொத்தமுள்ள  288 தொகுதிகளில், பாஜக 106 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எதிரணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு 162 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. இது அக்கட்சிக்கு சில நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

சிவசேனா கட்சி விதித்துள்ள நிபந்தனைகள் பாஜகவை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

அமைச்சரவையில், உள்துறை உள்ளிட்ட  ஐம்பது சதவிகிதத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பவை  சிவசேனா விதித்துள்ள  கட்சியின் முக்கிய நிபந்தனைகள் ஆகும்.

இந்த நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால், சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாபா சாஹிப் தரோட், சிவசேனா கட்சி எங்களை அணுகினால், தேசிய தலைமையிடம் பேசி ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறி இருக்கிறார்.

இது, பாஜகவுக்கு மேலும் நெருக்கடியை தந்துள்ளது. எனினும் சிவசேனாவின் கோரிக்கை குறித்து, பாஜக தலைமையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.